அனைத்துலக அளவில் நெருக்கடியை ஏற்படுத்தும்- சிறிலங்கா அரசுக்கு சம்பந்தன் எச்சரிக்கை

சிறுபான்மை மக்களுக்கு எதிரான தொடர்ச்சியாக சம்பவங்கள் அனைத்துலக அளவில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,

‘சட்டத்தை கையிலெடுத்து செயற்படும் நிலைமை ஏற்பட அரசாங்கம் இடமளிக்கக் கூடாது. நல்லாட்சியில் இனவாதம் தூண்டப்படுவதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளவும் முடியாது.

இனவாத செயற்பாடுகளை தடுக்க சட்டம், ஒழுங்கு ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை? அண்மைக் காலமாக இடம்பெறும் இனவாத செயற்பாடுகள் மிகவும் கண்டிக்கத் தக்கவை.

அம்பாறை சம்பவம் தொடர்பில் சந்தேகம் உள்ளது. காவல் நிலையம் அருகில் இருந்த போதும், தாக்க வந்தவர்கள் காவல்துறையினரின் காதினால் புகுந்து தப்பியுள்ளனர். இதன் பின்னணியில் உள்ள உண்மை நிலையை ஆராய வேண்டும்.

இளைஞர் ஒருவர் மீதான தாக்குதலை அடிப்படையாக வைத்து கண்டியில் வன்முறை இடம்பெற்றுள்ளது. பள்ளிவாசல்கள், வீடுகள் தாக்கப்பட்டன. உடைமைகள், வாகனங்கள் சேதமாக்கப்பட்டன.

இவற்றை அனுமதிக்க முடியாது.மக்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக சட்டம், ஒழுங்கு நிலை நாட்டப்படவில்லை.

சட்டத்தில் இருந்து தப்புவதற்காக வீடுகளை தீ வைத்து சேதம் விளைவிப்பது மோசமான நிலைமையை ஏற்படுத்தும். சம்பவம் நடந்து முடிந்த பின்னர் நடவடிக்கை எடுப்பதில் பயனில்லை. சட்டத்தை கையிலெடுத்து செயற்பட முடியும் என்று மக்கள் கருதுகின்றனரா?

இந்த தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது.சகல இனத்தினருக்கும் சம உரிமையுள்ளது. சட்டம் சமமாக செயற்படுத்தப்பட வேண்டும்.

தாம் பெரும்பான்மை இனம் என யாராவது கருதி செயற்படுவார்களானால் அதற்கு இடமளிக்க முடியாது. கண்டியில் மூன்று, நான்கு அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஏன் அவர்களால் செயற்பட முடியவில்லை?

கடந்த காலங்களில் சிறிலங்காவில் இவ்வாறான இன ரீதியான அடக்குமுறைகள் இடம்பெற்றன. அத்தகைய நிலையில் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இப்போது இனவாத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. சட்டம், நீதி எம்மை எதுவும் செய்யாது என்ற நிலைப்பாட்டில் இனவாத குழுக்கள் தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுவார்கள்.

ஆகவே குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட ஒழுங்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இந்த பிரச்சினைக்கு முழுமையான பொறுப்பை சிறிலங்கா அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.ஆனால் இந்த அரசாங்கம் எதன் அடிப்படையில் சட்டம் ஒழுங்கை கையாள்கின்றது என்ற கேள்வி எம்மத்தியில் எழுகின்றது.

சிலர் தாங்களே உயர்ந்தவர்கள் என நினைத்து கொண்டு ஏனையவர்களை அடக்க முனைகிறார்கள். எம்மைவிட பின்னோக்கி இருந்த நாடுகள் அனைத்தும் எம்மை விடவும் அபிவிருத்தி கண்டு நாட்டின் வளர்ச்சியில் முக்கியத்துவம் செலுத்துகின்றன.

நாம் இன்றும் இனவாத செயற்பாடுகளில் மூழ்கி செயற்படுவது தடுக்கப்பட வேண்டும். பிரதமர் இந்த விடயத்தில் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.