கண்டியில் ஊடரங்கு வேளையிலும் தாக்குதல்கள் – அதிகாலையில் பற்றியெரிந்த சொத்துக்கள்

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை அடுத்து. கண்டி மாவட்டத்தில் நேற்றிரவு ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போதிலும், ஆங்காங்கே தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெனிக்கின்ன முஸ்லிம் பிரதேசத்தில் நேற்றிரவு தாக்குதல் நடத்த முயன்ற நூற்றுக்கணக்கானோரைக் கொண்ட குழுவின் மீது சிறிலங்கா காவல்துறையில் துப்பாக்கிச் சூடு நடத்தி தடுத்துள்ளனர்.

அதேவேளை, வத்தேகம பகுதியிலும் முஸ்லிம்களின் சொத்துக்கள் மீது நள்ளிரவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. சில வாணிப நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

எனினும், சிறிலங்கா இராணுவத்தினரும், காவல்துறையினரும், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக, இன்று அதிகாலை 1 மணியளவில் அங்கு சென்றிருந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மடவளைப் பிரதேசத்திலும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து, அங்கும் இராணுவத்தினரும், காவல்துறையினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கண்டி மாவட்டத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த போதியளவு படையினர் இல்லை என்றும், எனவே ஏனைய மாவட்டங்களில் இருந்து 2000 பேரை உடனடியாக அனுப்பி, பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, அவசரகாலச்சட்டத்தின் மூலம் சிறிலங்கா படையினருக்கான அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையிலும், கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.