கண்டிச் சம்பவம்: ஞானசார தேரர் கூறுவது என்ன?

கண்டி – திகன, தெல்தெனிய பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள சம்பவத்தை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடும் போது; கண்டியில் ஏற்பட்டுள்ள இந்த சம்பவத்தை எம்மால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாது. சிங்களம் முஸ்லிம் என்ற பேதம் இல்லாமல் அனைவரும் சமாதானமாக இருக்க வேண்டும். அதை விடுத்து இவ்வாறான அசம்பாவிதங்களில் ஈடுபட்டால் விளைவு விபரீதமாக இருக்கும் என எச்சரித்துள்ளார்.

இது சிங்கள பௌத்த நாடு, இந்த நாட்டில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை முஸ்லிம் மக்களுக்கு நாம் சொல்லித்தருகின்றோம். கண்டியில் டிப்பர் வாகனத்தில் சென்ற 42 வயதுடைய குமார சிங்க என்ற இளைஞன் சிலரால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் சிறந்த சமூக சேவையாளர். ஒரு குடும்பஸ்தர். இவரை நம்பி மனைவி மற்றும் இரு பிள்ளைகள் இருக்கின்றார்கள். இவர் முஸ்லிம், சிங்களம் என்று பேதம் பார்க்காமல் அனைவருக்கும் உதவி செய்து வந்துள்ளார்.

இவர் வாகனத்தில் சென்றபோது முச்சக்கர வண்டியில் வந்தவர்களுக்கு இடம் கொடுக்காத காரணத்தினால் அந்த வாகனத்தை பின்தொடர்ந்து சென்று அந்த இளைஞனை முஸ்லிம் இளைஞர்கள் தாக்கியுள்ளனர். இதனால், குறித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறான நிலையிலேயே கண்டியில் கலவரம் ஏற்பட்டுள்ளது.

தற்போது நாடும் நாட்டு அரசியலும் ஸ்திரமற்ற நிலையில் காணப்படுகின்றது. அரசாங்கமும் மக்களும் தற்போது பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் முஸ்லிம் மக்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்றும், தயவு செய்து வன்முறைகளில் இறங்க வேண்டாம் என்றும் ஞானசார தேரர் எச்சரித்துள்ளார்.

இது பௌத்த நாடு, அடித்தால் திருப்பி அடிப்போம், கொலை செய்தால் நாமும் திருப்பி அடிப்போம். ஆகவே வன்முறைகள் வேண்டாம். அமைதியாக இருக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like