கண்டியில் ஊடரங்குச்சட்டம்! (Video)


கண்டி நிர்வாக மாவட்ட பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளை (06) காலை ஆறு மணிவரை அமுலில் இருக்கும் எனவும் பொலிஸ் ஊடக் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தெல்தெனிய பிரதேசத்தில் 41 வயதான நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து அப் பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியில் வந்த நபர்கள் குறித்த நபரை தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

இரண்டு வாகனங்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டு நிலைமையே இந்த மோதலுக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் சம்பவத்தை எதிர்த்து தெல்தெனிய உடிஸ்பத்துவ மற்றும் மெதமஹானுவர ஆகிய பிரதேசங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த சம்பவம் தொடர்பில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை கண்டி-திகனையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள, கைகலப்பையடுத்து, அக்குழுவினரை கலைப்பதற்காக, பொலிஸார் கண்ணீர்க் குண்டுப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

அந்தப் பகுதியில் ஒரு பதற்றமான நிலைமை காணப்படுவதுடன், கண்டியிலிருந்து பலகொல்ல ஊடாக, திகனையை கடந்து பயணிக்கவேண்டிய சகல வாகனங்களும், ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என, தகவல் தெரிவிக்கின்றது.