காணாமல் ஆக்கப்பட்டவரின் மனைவியும் காணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினராக நியமனம்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த 28ஆம் நாள், சாலிய பீரிஸ் தலைமையிலான காணாமல் போனோர் பணியகத்தின் 7 உறுப்பினர்களையும் நியமித்துள்ளார்.
இந்த ஏழு உறுப்பினர்களில் மட்டக்களப்பைச் சேர்ந்த ஜெயதீபா புண்ணியமூர்த்தி என்ற பெண்ணும் ஒருவராவார். இவர், காணாமல் ஆக்கப்பட்ட பத்மசிறி என்பவரின் மனைவியாவார்.
2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த நான்காவது நாள், மட்டக்களப்பில் இவரது கணவன் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்.
இதையடுத்து, காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறியும் போராட்டங்களில் ஜெயதீபா புண்ணியமூர்த்தி தீவிரமாக ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.