காணாமல் போனோர் பணியகத்தின் தலைவராக சாலிய பீரிஸ் – இராணுவ பிரதிநிதிக்கும் இடமளிப்பு

காணாமல் போனோர் பணியகத்தின் ஏழு உறுப்பினர்களின் நியமனங்களுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அங்கீகாரம் அளித்துள்ளார்.

அதிபர் சட்டவாளர் சாலிய பீரிஸ், காணாமல் போனோர் பணியகத்தின் தலைவராகச் செயற்படுவார் என்றும், ஏனைய ஆறு உறுப்பினர்களும் அவருடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்றும் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த கூட்டத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் பணியகத்தின் ஏனைய உறுப்பினர்களாக, ஜெயதீபா புண்ணியமூர்த்தி, மேஜர் ஜெனரல் மொஹந்தி அன்ரோனெட் பீரிஸ், கலாநிதி சிறியானி நிமல்கா பெர்னான்டோ, மிராக் ரகீம், சுமணசிறி லியனகே, கணபதிப்பிள்ளை வேந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் சிறிலங்கா அதிபர் அறிவித்துள்ளார்.

அதேவேளை, காணாமல் போனோர் பணியகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அதிபர் சட்டவாளர் சாலிய பீரிஸ், கருத்து வெளியிடுகையில், பணியகத்தின் உறுப்பினர்கள் அனைவரும் அடுத்தவாரம் சந்தித்து, எவ்வாறு பணியகத்தை ஒழுங்கமைப்பது என்பது, எதிர்கால நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாக ஆராயவுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, காணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள ஏழு பேரில், சிறிலங்கா இராணுவத்தின் சட்டப் பிரிவு பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் மொஹந்தி பீரிசும் ஒருவராவார்.

இவரது கணவர் மேஜர் ஜெனரல் பசில் பீரிஸ் சிறிலங்கா இராணுவத்தின் வரவுசெலவுத் திட்ட மற்றும் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.