சிறிலங்கா குறித்த தவறான புரிதல்களைக் கொண்டிருந்தது இந்தியா – மகிந்த

சிறிலங்காவில் இந்தியா துறைமுகங்களைக் கட்டவோ, நெடுஞ்சாலைகளை அமைக்கவோ இந்தியா ஆர்வம்காட்டவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் பெங்களூரு வழியாக க்குச் சென்றிருந்த மகிந்த ராஜபக்ச, அன்றிரவு அங்கு தங்கியிருந்து நேற்று அதிகாலையில் ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு, நேற்று மீண்டும் பெங்களூரு வழியாக கொழும்பு திரும்பியுள்ளார்.

பெங்களூரு விமான நிலையத்தில் ‘தி ஹிந்து’ செய்தியாளருக்கு, சிறிலங்காவில் சீனாவின் திட்டங்களின் மீது அதிகரித்துள்ள ஆர்வம் குறித்து அளித்துள்ள செவ்வியில் அவர்,

“துறைமுகங்கள், நெடுஞ்சாலைகளை அமைக்கும் பணிகளை முதலில் நாங்கள் இந்தியாவுக்கே வழங்கினோம்.

ஆனால், எப்படியோ அம்பாந்தோட்டையில் துறைமுகத்தை அமைக்க அவர்கள் ஆர்வமாக இருக்கவில்லை. போர் நடந்து கொண்டிருந்த நேரம் என்று நினைக்கிறேன்.

வேறென்ன செய்வது? நாங்கள் சீனாவிடம் சென்றோம். இதனைப் பற்றிக் கூறினோம். அந்தத் திட்டத்தை அவர்கள் உடனடியாகவே ஏற்றுக் கொண்டார்கள். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அது ஒரு வணிக பரிமாற்றம் மட்டுமேயாகும்.

அவர்களுக்குத் தெரியும் இதனை எப்படித் திருப்பிச் செலுத்துவார்கள் என்று. எமக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முக்கியத்துவம் தெரியும். அதனை வழங்கிய போது, நாட்டுக்குப் பின்னர் மற்றதைப் பார்ப்பதே, ஒரு தலைவராக எனது பிரதான கடமையாக இருந்தது.

துரதிஷ்டவசமாக தற்போதைய அரசாங்கம் எல்லாவற்றையும் விற்றுவிட்டது. எமது கொள்கை தனியார் மயமாக்கலுக்கு எதிரானதாக இருந்தது. தற்போதைய அரசாங்கம், 99 ஆண்டு குத்தகைக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்று விட்டது.

இந்தியாவுடன் எனது நாடு நல்ல உறவைக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர்கள் கடந்த காலங்களில் எம்மைப் பற்றி தவறான புரிதல்களைக் கொண்டிருந்தனர்.

இந்தியா ஒரு பதின்ம வயது பெண் என்று ஒரு இந்தியத் தூதுவர் எனக்குக் கூறினார், ஏனென்றால், பதின்ம வயதுப் பெண்கள் தவறான புரிந்தல்களைக் கொண்டிருப்பார்கள். இதனைக் கூறியவர் இந்தியாவின் முன்னாள் தூதுவர் நிருபமா ராவ்.

சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை சிறந்ததாக இருந்த அதேவேளை, சில விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like