சுவிஸ் குமார் தப்பிச்செல்ல உதவிய குற்றசாட்டு – சந்தேக நபரை கைது செய்ய தீவிர நடவடிக்கை!

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சுவிஸ் குமார் தப்பிச்செல்ல உதவினார் என குற்றம் சாட்டப்பட்டுள்ள உப காவல்துறை பரிசோதகர் சு. ஸ்ரீகஜனை கைது செய்வதற்கு தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாக குற்றபுலனாய்வு துறை அதிகாரி மன்றில் தெரிவித்தார்.

குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் இன்று; புதன்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அதன் போது குறித்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான யாழ்.காவல்நிலைய முன்னாள் உப காவல்துறை பரிசோதகர் சுந்தரேஸ்வரன் ஸ்ரீகஜன் தலைமறைவாகி உள்ளார். அந்நிலையிலையே வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

அந்நிலையில் இன்றைய தினம் மன்றில் தோன்றிய குற்றபுலனாய்வு துறை அதிகாரி இரண்டவாது சந்தேக நபரை கைது செய்வதற்காக தீவிரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார். அதேவேளை குறித்த சந்தேக நபருக்கு எதிராக நீதிமன்றால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.