இந்து மக்களின் வணக்க சிலைகள் உடைப்பு : பொலிஸாரின் தடையினையும் மீறி கவனயீர்ப்பு பேரணி!

மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக இந்து மக்களின் வணக்க சிலைகள் உடைக்கப்பட்டு வருவதை கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை(27-02-2018) மன்னாரில் இந்து மகா சபையின் ஏற்பாட்டில் இடம்பெற இருந்த கவனயீர்ப்பு பேரணிக்கு இறுதி நேரத்தில் மன்னார் பொலிஸார் தடை விதித்தது.

இதனால் சற்று அமைதியின்மை ஏற்பட்டதோடு,பொலிஸாரின் தடையினையும் மீறி கவனயீர்ப்பு பேரணி இடம் பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக இந்து மக்களின் வணக்க சிலைகள் உடைக்கப்பட்டு வந்ததோடு,வணக்க சிலைகள் திருடிச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த சம்பவங்கள் மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியதோடு,மாவட்டத்தில் இன ஒற்றுமையை கெடுக்கும் செயற்பாடாக காணப்பட்டது.

இந்த நிலையில் குறித்த சம்பவங்களை கண்டித்து மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை (27-02-2018) இந்து மகா சபையின் ஏற்பாட்டில் மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள ஏற்கனவே உடைக்கப்பட்டு வணக்க சிலைகள் திருடிச் செல்லப்பட்ட ‘லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு’ முன் விசேட மத வழிபாடுகளைத்தொடர்ந்து மன்னார் மாவட்டச் செயலகம் வரை அமைதியான முறையில் கவனயீர்ப்பு பேரணி நடாத்த தீர்மானிக்கப்பட்டதோடு உரிய தரப்பினரிடம் அனுதியும் பெற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை(27) காலை 9.30 மணியளவில் தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள ஏற்கனவே உடைக்கப்பட்ட வணக்க சிலைகள் திருடிச் செல்லப்பட்ட ‘லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு’ முன் விசேட மத வழிபாடு இடம் பெற்றது.

இதன் போது குறித்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர். மத வழிபாடு முடிவடைந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதரிகாரி உள்ளிட்ட குழுவினர் கவனயீர்ப்பு பேரணிக்கு அனுமதி மறுத்தனர்.

இதனால் அங்கு கூடி நின்ற மக்களுக்கும்,பொலிஸாருக்கும் இடையில் சற்று நேரம் தர்க்க நிலை ஏற்பட்டது. இதனால் குறித்த பகுதியில் சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

நூற்றுக்கணக்கான ஆண்கள்,பெண்கள்,வயோதிபர்கள் என பலர் அங்கு கூடியிருந்த நிலையில் பொலிஸாரின் தடையினையும் மீறி அமைதியான முறையில் மன்னார் மாவட்டச் செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.

பின்னர் பேரணியில் கலந்து கொண்டவர்கள் மாவட்டச் செயலகத்திற்கு முன் கூடி நிற்க ‘ இந்து மகா சபையின்’ பிரதி நிதிகள் மாவட்டச் செயலகத்தினுள் சென்று தமது கோரிக்கை அடங்கிய மகஜரை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்ததோடு,குறித்த சம்பவங்களுக்கு துரித கதியில் தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like