புளொட்டின் முன்னாள் உறுப்பினரின் வீட்டில் இருந்த ஆயுதங்கள் தொடர்பில் வெளிவந்த புது தகவல்

புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதன்படி குறித்த ஆயுதங்கள் 1998ஆம் ஆண்டு இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டவை எனவும், அவை காணாமற்போயிருந்ததாகவும், இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளதாக பொலிஸார் யாழ். நீதிவான் நீதிமன்றில் இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து கடந்த வருடம் பாரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டிருந்தன. குறித்த வீட்டில் புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான சிவகுமார் தங்கியிருந்துள்ளார்.

குறித்த வீடு விடுதலைப்புலிகளின் காலத்தில் புளொட் அமைப்பின் அலுவலகமாகவும் இருந்துள்ளது.

இந்த நிலையில் மீட்கப்பட்ட ஆயுதங்களுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என சிவகுமார் தெரிவித்திருந்தார்.

புளொட் அமைப்பினர் அந்த வீட்டிலிருந்து வெளியேறிய பின்பும் சிவகுமார் தொடர்ந்து அவ்வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டு உரிமையாளர் யாழ்.மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார். நீதிமன்றின் கட்டளையின் அடிப்படையில் கடந்த டிசம்பர் 19ஆம் திகதி அந்த வீட்டிலிருந்தவரை வெளியேற்ற பொலிஸார் சென்றனர்.

வீட்டிலுள்ள பொருட்களை வெளியேற்றும் போது அங்கிருந்த அலுமாரி ஒன்றுக்குள் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் காணப்பட்டன.

அதனையடுத்து புளொட்டின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இந்த நிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்க எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது,

“1998ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி இராணுவத்தின் காலாற்படைக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகள் காணாமற்போயிருந்தன. அந்த ஆயுதங்களே தற்போது மீட்கப்பட்டுள்ளன. அவை சந்தேகநபர் வசம் சென்றமை தொடர்பில் இராணுவத்துக்கு தெரியாது” என இராணுவத் தலைமையகம் கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

அந்த வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன், சந்தேகநபரின் விளக்கமறியலை வரும் 12ஆம் திகதிவரை நீடித்தார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like