அனந்தி சசிதரன் மற்றும் சிவகரன் கட்சியிலிருந்து நீக்கம்? தமிழ் அரசுக் கட்சி அதிரடி நடவடிக்கை

வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் மற்றும் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணியின் முன்னாள் செயலர் சிவகரன் இருவரையும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கொழும்பில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

முன்னதாக, ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ள வட மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் மற்றும் சிவகரன் இருவரையும் கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானம் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

சிவகரனை மாத்திரம் இப்போது நீக்கலாம். அனந்தி சசிதரன் பற்றிப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்ற யோசனை ஒரு தரப்பினர் இதன் போது முன்வைத்திருந்தனர்.

எனினும், நடவடிக்கை எடுப்பதாயின் இருவருக்கும் எதிராகவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. இறுதியில் இருவரையும் கட்சியிலிருந்து நீக்குவதென்று ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தீர்மானம் எடுத்த பின்னர் அதனை மீறி இவர்கள் இருவரும் செயற்பட்டனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டே ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.