யாழ் குப்பிளானில் சிறப்பாக இடம்பெற்ற உருளைக்கிழங்கு அறுவடை விழா!!

யாழ். மாவட்ட உருளைக்கிழங்கு உற்பத்தி விற்பனையாளர் கூட்டுறவுச் சமாசத்தின் ஏற்பாட்டில் உருளைக்கிழங்கு அறுவடை வயல் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை(25) காலை-09 மணி முதல் குப்பிளான் தெற்கில் அமைந்துள்ள விவசாயிகள் விளைநிலத்தில் விமரிசையாக நடைபெற்றது.

யாழ். மாவட்ட உருளைக்கிழங்கு உற்பத்தி விற்பனையாளர் கூட்டுறவுச் சமாசத் தலைவர் இ.தெய்வேந்திரம் தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவில், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உருளைக்கிழங்கு அறுவடையைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து விழாவில் விருந்தினர்களாகக் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பிரத்தியேகச் செயலாளர் சதாசிவம் இராமநாதன் மற்றும் யாழ். மாவட்ட விவசாயப் பணிப்பாளர் திருமதி- சசிபிரபா கைலேஸ்வரன், உடுவில் பிரதேச செயலாளர் திருமதி- மதுமதி வசந்தகுமார் உள்ளிட்டோரும் உருளைக்கிழங்கு அறுவடையில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து காலை-09 மணி முதல் குப்பிளான் விவசாய சம்மேளன முன்றலில் விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன. வரவேற்புரையை குப்பிளான் விவசாய சம்மேளனத் தலைவர் செ. நவரத்தினராசா நிகழ்த்தினார்.குறித்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இலவசமாகத் தொப்பிகள் வழங்கப்பட்டன. அத்துடன் கலந்து கொண்ட அனைவருக்கும் உருளைக்கிழங்கில் விசேடமாகத் தயாரிக்கப்பட்ட தின்பண்டங்களும் பரிமாறப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்க விசேட அம்சமாகும்.