லீசிங் அடிப்படையில் ஹஏஸ் வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்துவிட்டு நிலுவைக் கொடுப்பனவை சலுத்தத் தவறியவரின் உடமைகளைப் பறிமுதல் செய்ய கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் கட்டளை

யாழ்ப்பாணத்திலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் லீசிங் அடிப்படையில் ஹஏஸ் வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்துவிட்டு நிலுவைக் கொடுப்பனவை      

செலுத்தத் தவறியவரின் உடமைகளைப் பறிமுதல் செய்ய கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள அந்த நபரின் வீட்டிலுள்ள உடமைகளைக் கணக்கிட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளருக்கு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் எழுத்தாணைக் கட்டளை வழங்கியிருந்தது.
வர்த்தக மேல் நீதிமன்றின் எழுத்தாணைக் கட்டளையை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் திருமதி மீரா வடிவேற்கரசன் இன்று வியாழக்கிழமை நிறைவேற்றினார்.
யாழ்ப்பாணத்திலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் லீசிங் அடிப்படையில் ஹஏஸ் வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்த நபர் நிலுவைப் பணமாக 8 இலட்சம் ரூபாவை செலுத்தத் தவறியுள்ளார். அதற்கான அவகாசத்தை நிதி நிறுவனம் வழங்கியபோதும் அவர் அதனைச் செலுத்தத் தவறினார்.
நிதி நிறுவனத்தால் கொழும்பு மேல் நீதிமன்றில் எழுத்தாணை மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் எதிர் மனுதாரரின் சொத்துடமைகளைப் பறிமுதல் செய்ய நீதிமன்றம் கட்டளை வழங்கியது. அந்தக் கட்டளையை நிறைவேற்றுமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளருக்கு மன்று பணித்தது.
இந்த நிலையில் எழுத்தாணை மனுதாரரான நிதி நிறுவனம், யாழ்ப்பாணம் பொலிஸார், நீதிமன்ற உத்தியோகத்தர்களுடன், எதிர் மனுதாரர் வதியும் இல்லத்துக்குச் சென்ற யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர், எழுத்தாணைக் கட்டளையை நிறைவேற்றினார்.
எதிர் மனுதாரரின் வீட்டிலிருந்த தளபாடங்கள் கணக்கிடப்பட்டு நிதி நிறுவனத்துக்கு அறிக்கை வழங்கப்பட்டது. அவரிடம் தற்போதுள்ள தளபாடங்களின் பெறுமதி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.