கிளிநொச்சி பெண் நோயியல் மகப்பேற்று வைத்தியசாலையை சரியான இடத்தில் அமைக்க வேண்டும்

கிளிநொச்சி மாவட்டத்தில் பெண் நோயியல் மகப்பேற்று சிறப்பு வைத்தியசாலை அமைக்கப்படவுள்ள நிலையில் அற்கான சரியான இடத்தை தெரிவு செய்ய வேண்டும் என பல்வேறு தரப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் வடக்கு மாகாணத்தின் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் நெதர்லாந்து அரசாங்கத்தின் கடன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மருத்துவத்துறையை விருத்தி செய்யும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியில் வடமாகாணத்திற்கான புனர்வாழ்வு வைத்தியசாலை ஒன்றினையும், கிளிநொச்சி மாவட்டத்தில் வடமாகாணத்திற்கான சிறப்பு பெண்நோயியல் மகப்பேற்று வைத்தியசாலையை அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலை வளாகத்தில் குறித்த பெண் நோயியல் வைத்தியசாலையை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வைத்தியசாலையை கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலை வளாகத்தில் அமைப்பதற்கு போதுமான காணி இல்லையெனவும் மாற்றுக் காணி ஒன்றைத் தெரிவுசெய்து அந்தக் காணியிலே வடமாகாண மாகாணத்திற்குரிய வைத்தியசாலை அமைக்க வேண்டுமென பல்வேறு தரப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

இது தொடர்பில் அந்த அமைப்புக்கள் கருத்து வெளியிடுகையில்,

மாவட்ட பொதுவைத்தியசாலையானது கடந்த 2006ம் ஆண்டுக்கு முன்னர் கிளிநொச்சி பழைய வைத்தியசாலை வளாகத்தில் பல்வேறு இடநெருக்கடிகளுக்கு மத்தியில் இயங்கி வந்தது.

தற்போது கிளிநொச்சி பொதுவைத்தியசாலைக் காணி 2003ம் ஆண்டு வைத்தியசாலைக்கென தெரிவு செய்யப்பட்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் வைத்தியசாலைக்கான கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன

மூன்று கட்டங்களாக இதன் கட்டுமானப்பணிகளை முன்னெடுப்பது என திட்டங்கள் தயாரிக்கப்பட்டு முதலாம் கட்டப்பணிகள் மாத்திரம் பூர்த்தி செய்யப்பட்டு கடந்த 2006ம் ஆண்டு முதல் கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலை இயங்கி வருகின்றது.

ஏனைய இரண்டு பிரிவுகளாக மேற்கொள்ளப்படவேண்டிய கட்டுமானப்பணிகள் எவையும் முன்னெடுக்கப்படாது யுத்தத்தின் போது 2008ம் ஆண்டு குறித்த வைத்தியசாலை செயலிழந்திருந்தது.

மீண்டும் யுத்தத்தின் பின்னர் 2010ம் ஆண்டு மீள இவ்வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஏனைய கட்டுமானப்பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்கள் நடைபெற்றது.

இரண்டாவது கட்டுமானப்பணிகளை ஆரம்பிக்கின்ற போது விபத்து சேவைப்பிரிவு மற்றும் மகப்பேற்றுப்பகுதி என்பனவும் அமைக்கப்படுவதென இந்தக் கலந்துரையாடல்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பான வரைபடங்கள் மற்றும் தேவைபற்றிய கோரிக்கைகள் மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சுக்களுக்கு அனுப்பப்பட்டிருந்தன.

மாவட்ட பொதுவைத்தியசாலைக்குரிய அடிப்படை கட்டுமானங்கள் இன்றி இயங்கி வருகின்றன. ஒவ்வொரு பிரிவுகளிலும் இரண்டு விடுதிகள் இருக்க வேண்டிய நிலையில் ஒவ்வொரு விடுதிகள் மாத்திரமே உள்ளன.

கண் சிகிச்சை, என்புமுறிவுகளுக்கான சிகிச்சை, தோல் சிகிச்சை, இருதய நோய் சிகிச்சை, விபத்துப்பிரிவு, என்பன எந்தவிதமான கட்டிடங்களும் விடுதிகளும் இன்றி இயங்கிவருகின்றது.

இதனால் இவ்வாறான சிகிச்சை பெற வேண்டியவர்கள் வெளிமாவட்ட வைத்தியசாலைகளுக்க அனுப்பப்படுகின்றனர். சிறுநீரக சுத்திகரிப்புக்கான இயந்திரங்கள் உள்ளபோதும் அவற்றுக்கான கட்டடங்கள் அவற்றை இயக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

குறித்த வைத்தியசாலை வளாகத்தில் வடமாகாணத்திற்கான பெண்நோயியல் சிறப்பு வைத்தியசாலையினை இந்த வைத்தியசாலை வளாகத்தில் அமைப்பதற்கு திரைமறைவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளன.

இந்த மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்றிருக்கின்ற பெண்நோயியல் வைத்தியசாலையை அமைக்கவேண்டுமென்றும் மாவட்ட பொதுவைத்தியசாலைக்குரிய ஏனைய கட்டுமானப்பணிகளையும் முன்னெடுக்க மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சுக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.