ரயில் முன் பாய்ந்தார் யுவதி! – சாரதி மீது தாக்குதல்!

திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிச் புறப்பட்ட ரயிலின் முன் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஒரு குழந்தைக்குத் தாயான 19 வயதுடைய பெண் ஒருவரே நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ரயில் புறப்பட்டு சில நிமிடங்களில் பிரதான ரயில் நிலையத்தில் இருந்து சற்று தொலைவில் குறித்த பெண் புகையிரதத்தின் முன்னால் வீழ்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து உயிரிழந்த பெண்ணின் சடலத்தினை அகற்றும் பணிகள் நடைபெற்ற சந்தர்ப்பத்தில், அங்கிருந்த இளைஞர் குழுவினர் ரயில் சாரதி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதோடு, ரயில் இயந்திரத்திற்கும் சேதத்தினை ஏற்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் அங்கிருந்து அகற்றப்பட்டதோடு, காயமடைந்த ரயில் சாரதியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேதம் விளைவிக்கப்பட்ட ரயில் இயந்திரம் மாற்றப்பட்டு, 3 மணிநேர தாமதத்தின் பின்னர் ரயில் கொழும்பை நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த கால தாமதத்தினால் பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கியதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, சம்பவம் தொடர்பாக திருகோணமலை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.