சிலாபத்தில் பாடசாலையின் அதிபர் தகாத வார்த்தைகளால் திட்டு

சிலாபத்தில் பாடசாலையின் அதிபர் ஒருவர் மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும், மாணவர்களை அநாவசியமாக அடிப்பதாகவும் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைபாட்டை மாணவர்கள் ஒன்றிணைந்து முன்வைத்துள்ளதுடன், சிலாபம் நகரில் உள்ள நஸ்ரியா மத்திய கல்லூரியின் அதிபர் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பாடசாலையின் அதிபர் மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும், மாணவர்களை அநாவசியமாக அடிப்பதாகவும் அதிபரின் இந்த நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெறுவதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை முறையாக மேற்கொள்ளப்பட முடியாமல் இருப்பதாகவும் முறைப்பாடு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சிலாபம், நஸ்ரியா மத்திய கல்லூரிக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் பாடசாலைக்கு சென்றுள்ளனர்.

இதன்போது, அந்த குழுவினர் பாடசாலையின் ஆசிரியர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமித்துள்ளதுடன், முறைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்துமாறு அந்தக் குழுவை பணித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பில் பெற்றோரும் குறிப்பிட்ட அதிபரின் நடத்தை தொடர்பாக அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.