மைத்திரிக்கு எதிர்ச் சவால் விடும் ரணில்! என்ன நடக்கும் நாளை?

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றின் மூலமாக மட்டுமே பிரதமர் பதவியை தன்னிடமிருந்து பறிக்கமுடியும் என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கிடையில் இன்றைய தினம் நள்ளிரவு வரை இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் தோற்றால் மட்டுமே பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய தான் உத்தேசித்திருப்பதாகவும், வேறு வகையில் தன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம், நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்கொண்டு செல்லவே ஐக்கிய தேசியக் கட்சி விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமர் பதவியில் ரணில் தொடர வேண்டும் என்பதே கட்சியின் விருப்பம் என்றும் கட்சிக்குள் அது தொடர்பான வேறு தெரிவுகள் இல்லை என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.