மஹிந்தவின் அழைப்பை உறுதி செய்த ரணில்! (வீடியோ)

சமகால அரசியல் நெருக்கடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னுடன் உரையாடியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பிரதமர் இந்த தகவலை வெளியிட்டார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக வேண்டாம் என மஹிந்த கேட்டுக் கொண்டதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன நேற்றைய தினம் தெரிவித்தார்.

இந்த கருத்தினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிராகரித்தார்.

இந்நிலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமரிடம் ஊடகவியலாளர்கள் இது தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை முன்னாள் ஜனாதிபதி தன்னுடன் உரையாடியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் சந்தித்துக் கொண்ட போது இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.

பிரதமர் பதவியில் தான் விலகுவதாக கூறப்படும் செய்தி தொடர்பில் மஹிந்த தன்னிடம் வினவினார் என பிரதமர் கூறியுள்ளார்.

பதவி விலக போகிறீர்களா….? என மஹிந்த என்னிடம் வினவினார். நான் வேலை செய்து கொண்டு இருக்கின்றேன் என்றேன். பின்னர் சில விடயங்கள் குறித்து பேசிவிட்டு சென்றார்.

இது தொடர்பில் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் கேள்வியை கேட்கலாம் அல்லவா” என ரணில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதியுடன் தொடர்பு உள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டினை தான் நிராகரிப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.