மலைநாட்டு ரயில் போக்குவரத்துக்கு புதிதாக 12 எஞ்சின்கள்

மலைநாட்டு ரயில் பாதையில் போக்குவரத்தில் ஈடுபடுத்தவென 12 ரயில் எஞ்சின்களை புதிதாக கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மத்திய மலைநாட்டுக்கான ரயில் ​போக்குவரத்தை மேம்படுத்தவும், தற்போதைய பழைய எஞ்சின்களுக்கு பதிலாக செயற்திறன் கொண்ட புதிய எஞ்சின்களை சேவையில் ஈடுபடுத்தவும் போக்குவரத்து அமைச்சு தீர்மானித்திருந்தது.

இதனையடுத்து அரசாங்க டெண்டர் சபையின் பரிந்துரையின் பிரகாரம் மலைநாட்டுக்கான ரயில்பாதையில் சேவையில் ஈடுபடுத்த 12 ரயில் எஞ்சின்களை கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சிவில் விமான சேவைகள் மற்றும் ​போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்தார்.

இதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதனையடுத்து அமெரிக்காவின் எம்.எஸ். இலெக்ட்ரிகல்ஸ் நிறுவனத்திடம் இருந்து தலா நான்கு மில்லியன் டொலர்கள் செலவில் 12 புதிய ரயில் எஞ்சின்கள் விரைவில் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.