அறையை உடைத்து கேரளக் கஞ்சாவைத் திருடிய குற்றவாளிகள் மூவருக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனை

கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற சான்றுப்பொருள்கள் அறையை உடைத்து கேரளக் கஞ்சாவைத் திருடிய குற்றவாளிகள் மூவருக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று தீர்பளித்தது.
அத்துடன், குற்றவாளிகள் மூவரும் தலா ஒரு இலட்சத்து 8 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்தவேண்டும்.

அதனை செலுத்தத் தவறின் 3 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டார்.
2015ஆம் ஆண்டு செப்ரெம்பர் 21ஆம் திகதி கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற சான்றுப்பொருள்கள் அறையை உடைக்கப்பட்டு 27 இலட்சம் ரூபா பெறுமதியான 12 பார்சல்களாகக் கட்டப்பட்டிருந்த சான்றுப்பொருள் கஞ்சா திருடப்பட்டது. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா பிரசாந்தன் அல்லது குமா அல்லது குகன், பத்மநாதன் தர்சன் மற்றும் கணேசன் நதீஸ்வரன் ஆகிய மூவருமே கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 7 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் மற்றும் 2 கைக்கோடரிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
சந்தேகநபர்களிடம் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் ஆரம்ப விசாரணைகள் இடம்பெற்று சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வழக்கேடுகள் கையளிக்கப்பட்டன. சந்தேகநபர்கள் மூவருக்கும் எதிராக அரச சொத்தைத் திருடிய குற்றச்சாட்டை முன்வைத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 
அவர்கள் குற்றத்தை ஏற்றுக்கொண்டதால் தண்டனைத் தீர்ப்பை நீதிமன்று வழங்கியது.ஸ
இதேவேளை, வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற எதிரிகள் மூவரும் தண்டனைக் கைதிகளாக ஏற்கனவே சிறை வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like