யாருக்கும் அடி பணியமாட்டோம்! ரணிலை நீக்க முடியாது

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து எமது கட்சியின் தலைவரை நாங்கள் நீக்கமாட்டோம் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் ஏற்படுத்தியுள்ள அரசியல் திருப்புமுனையால் கொழும்பில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவளித்த கட்சி பெரு வெற்றியைப் பெற்று இருக்கிறது.

ஆனால் ஆளும் அரசாங்கத்தின் இரண்டு கட்சிகளும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை. உள்ளாட்சி தேர்தல் நாடாளுமன்ற ஆட்சியை தீர்மானிக்காத போதும், மக்களின் ஆதரவு யார் பக்கம் என்பதை நிரூபிக்கும் தேர்தலாக அது இம்முறை அமைந்திருக்கிறது.

ஏற்கனவே இரண்டு கட்சிக்குள்ளும் இருந்த உட்கட்சி பகை, முரண்பாடுகள் தேர்தலின் பின்னர் அது மேலும் உக்கிரமடைந்துள்ளது.

அதுமாத்திரமன்றி, ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைப் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலக வேண்டும் என்றும் அந்தக் கட்சியில் இருப்பவர்களும் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பிரதமரை மாற்றுமாறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியை ஏற்படுத்துமாறு முன்னணி அமைச்சர்களும், கட்சி முக்கியஸ்தர்களும் வேண்டுகோள் விடுத்ததோடு, அழுத்தத்தையும் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, கூட்டு அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகிக் கொண்டால், ஐதேக தனித்து ஆட்சியமைக்கும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து எமது கட்சியின் தலைவரை நாங்கள் நீக்கமாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தனிப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி ஏற்படின், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தாங்கள் ஆதரவு கொடுக்கத் தயாராக இருப்பதாக மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் இன்று முடிவெடுத்திருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.

இந்த நிலையில் நாட்டின் தலைநகரில் பெரும் பரபரப்பு நிறைந்த சூழல் ஏற்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து, சந்திப்புக்களும், தீர்மானங்களும் எடுக்கும் நிலைக்கு அரசியல் களம் மாறியிருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.