ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை இழந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு

வடக்கு கிழக்கில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளின் வீழ்ச்சி: தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மக்கள் புகட்டியுள்ள பாடம் உணரப்படுமா?

வெளிவந்துள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் மக்களின் மனங்களை புடம்போட்டு காட்டுவனவாய் அமைந்துள்ளன.

தெற்கிலே முன்னாள் அதிபரின் புதிய கட்சி அதிகயிக்கத்தக்க வகையில் வாக்கு வேட்டையை நடத்தியுள்ள நிலையில்; வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆச்சரியப்படத்தக்க வகையில் வாக்குகளை இழந்துள்ளமை கவனிப்பிற்குரியதாகிறது.

மக்களின் உணர்வுகள், கட்சிகளால் உணரப்படவேண்டுமே தவிர கட்சியின் உணர்வுகள், அதன் தீர்மானங்கள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் எனும் எதிர்பார்ப்பு ஜனநாயக அரசியலில் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகின்றது.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அண்மைக்கால நகர்வுகள் மற்றும் நடவடிக்கைகள் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு முரண்பட்டதாய் உணரப்பட அதை நடந்து முடிந்த தேர்தல் மூலம் மக்கள் சமிக்ஞையாய் வெளிப்படுத்தியும் காண்பித்துமுள்ளனர்.

2015ம் ஆண்டு தேர்தலோடு ஒப்பிடுகையில் வடக்கிலும் கிழக்கிலுமாக சுமார் ஒரு லட்சத்து ஜம்பதினாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இழந்துள்ளது. வடக்கிலே கஜேந்திர குமாரின் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் வாக்கு ஜம்பதுனாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளால் உயர்த்தப்பட, கிழக்கிலே பிள்ளையான் மற்றும் சூரியன் கட்சியினரின் வாக்குகள் அதிகரித்துள்ள நிலைமையினை அவதானிக்கக் கூடியதாய் உள்ளது.

சமகால அரசியல் களத்தில் தமிழ்க் கட்சிகளிடத்தில் பார்க்க முடியாதுள்ள வெளிப்படைத் தன்மை, மக்களின் மனம் அறிந்து செயற்படாத் தன்மை, முன்னுக்குப் பின் முரணானதும் முரண்டு பிடிப்பதுமான செயற்பாடுகள் மக்களால் எச்சரிக்கப் படவேண்டிய நிலைமையினை கட்சிகளுக்குத் ஏற்படுத்திவிட்டது.

அதற்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதமாகவே வாக்குச் சீட்டை மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.

இவற்றை உணர்ந்து கூட்டமைப்பு உயரிய நோக்கில் செயற்படவேண்டும். இல்லாவிடத்து நிறையப் பாடங்கள் மக்களால் புகட்டப்படும் என்பது தெளிவு.

மேலும் தெற்கில் நிலவுகின்ற அரசியல் களம் பல்வேறுபட்ட கொள்கைகளின் மீள்பரிசீலனையின் தேவைப்பாட்டை தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு உணர்த்தியுள்ளமையும் அவதானிக்கற்பாலது.

வாசிகன்