சவாலில் வென்று சாதித்துக் காட்டிய மஹிந்த அணி!

களுத்துறை மாவட்டத்தின் பேருவளை தொகுதியை சவால் விட்டதைப் போலவே உள்ளூராட்சித் தேர்தலில் வென்று மஹிந்த அணி சாதித்துக் காட்டியுள்ளது.

2014ம் ஆண்டு ஜூன் மாதம் பேருவளை தொகுதிக்குட்பட்ட அளுத்கம நகரத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேனாவினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரம் காரணமாக அன்றைய ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக திரண்ட முஸ்லிம் வாக்காளர்கள் அவரை ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடித்திருந்தனர்.

இந்நிலையில் உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரத்தின்போது பேருவளை தொகுதிக்கான பொதுஜன பெரமுன அமைப்பாளரும் கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான பியல் நிசாந்த, களுத்துறை தேர்தல் தொகுதியை தனது கட்சி வெற்றி கொள்ளும் என்று சவால் விட்டிருந்தார்.

அவ்வாறு வெற்றி கொள்ளாது போனால் தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்வதாகவும் அவர் சூளுரைத்திருந்தார்.

பேருவளைத் தொகுதியில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்கள் வழமையாக ஐ.தே.க.வுக்கே வாக்களித்து பழக்கப்பட்டிருந்ததுடன், முஸ்லிம்களுடன் நெருக்கமான நட்புறவைக் கொண்டிருந்த அமைச்சர் ராஜித சேனாரத்ன அத்தொகுதியில் ஐ.தே.க. வின் அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

எனினும் பியல் நிசாந்த சவால் விட்டிருந்தது போன்று பொதுஜன பெரமுன அணி இம்முறை பேருவளை தொகுதியை வென்று சாதனை படைத்துள்ளது.