மைத்திரியும், ரணிலும் உடன் பதவி விலக வேண்டும்! தென்னிலங்கையில் சர்ச்சை பேச்சு

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தங்கள் பதவிகளை உடனடியாக ராஜினாமாச் செய்யவேண்டுமென்று கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு, பொரளையில் அமைந்துள்ள என்.எம். பெரேரா அரங்கத்தில் இன்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வௌியிடும்போதே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன தௌிவான பெரும்பான்மை வெற்றியைப் பெற்றுக் கொண்டுள்ளது.

அத்தியாவசியப்’ பொருட்களின் விலையேற்றம் மட்டுமன்றி ஜனாதிபதி மற்றும் பிரதமரால் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காணமுடியாது என்ற மக்களின் கருத்து, புதிய அரசியலமைப்புக்கு எதிரான மக்கள் உணர்வு என்பனவே இந்த வெற்றிக்கான பின்னணிக்கான காரணங்களாகும்.

அந்த வகையில் பொதுமக்கள் மிகத் தெளிவாகவே ஜனாதிபதி மற்றும் பிரதமரை நிராகரித்துள்ளார்கள். எனவே இருவரும் உடனடியாக தங்கள் பதவிகளை ராஜினாமாச் செய்வதே பொருத்தமானது என்றும் தினேஷ் குணவர்த்தன வலியுறுத்தியுள்ளார்.