காத்தான்குடி மக்களுக்கு ஜனாதிபதி விசேட நன்றி

சகல வட்டாரங்களிலும் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் காத்தான்குடி நகர சபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய காத்தான்குடி மக்களுக்கும், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,

உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சகல வட்டாரங்களிலும் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த ஒரே ஒரு நகர சபை கத்தான்குடி நகர சபை மாத்திரமே. இதற்காக கட்சித் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன எனக்கும், வாக்களித்த காத்தான்குடி மக்களுக்கும் விசேட நன்றிகளையும் – பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டார். அத்துடன், வெகுவிரைவில் காத்தான்குடிக்கு தான் வரவுள்ளதாகவும் ஜனாதிபதி என்னிடம் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு விசேட நிதி ஒதுக்கீடுகளை செய்து பாரிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஜனாதிபதி இதன்போது உறுதி வழங்கினார்.

மட்டக்களப்பு, ஏறாவூர், காத்தான்குடி உள்ளிட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு வழங்கிய சகலருக்கும் எனது சார்பிலும் கட்சித் தலைவர் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். விசேடமாக காத்தான்குடி மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை வீண்போகாமல் நாங்கள் எமது பணிகளை சரியான முறையில் முன்னெடுப்போம். ஜனாதிபதியின் மனங்களில் காத்தான்குடி மக்கள் தொடர்பிலும் – முஸ்லிம்கள் தொடர்பிலும் நன்மதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை ஏற்படுத்தவே நாங்கள் பாடுபட்டோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

.காத்தான்குடி மக்களுக்கு ஜனாதிபதி விசேட நன்றி