2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: வாக்களிப்பு ஆரம்பம்!

நாட்டில் முதற்தடவையாக கலப்பு முறையின் கீழ் நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இடமபெறவுள்ளது.

இன்று நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒரு கோடியே 57 இலட்சத்து 60ஆயிரத்து 862 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

340 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 8356 பேரை தெரிவு செய்வதற்காக இந்தத் தேர்தல் நடத்தப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிடுகின்றார்.

இடைக்கால தடையுத்தரவு காரணமாக எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் இன்று நடைபெற மாட்டாது.

இம்முறை நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 57,252 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

24 மாநகர சபைகளும், 41 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளுக்கான பிரதிநிதிகள் இந்தத் தேர்தலூடாக தெரிவு செய்யப்படவுள்ளனர்.

13374 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், இன்று காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகிய வாக்களிப்பு மாலை நான்கு மணிக்கு நிறைவடையவுள்ளது.

இம்முறை கலப்பு முறையில் தேர்தல் நடைபெறுவதுடன் 2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சில திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.

திருத்தப்பட்ட புதிய உள்ளூராட்சி சட்டமூலத்திற்கு அமைய நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக 6 பிரதேச சபைகள் நிறுவப்பட்டன.

இதன்பிரகாரம் அம்பகமுவ பிரதேச சபை, அம்பகமுவ, நோர்வூட் மற்றும் மஸ்கெலியா எனும் மூன்று பிரிவுகளாக வகுக்கப்ப்டடுள்ளன.

அத்துடன் வட்டார அடிப்படையில் 60 சதவீதமான வாக்காளர்களும் விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் 40 சதவீதமான பிரதிநிதிகளும் இம்முறை தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இதேவேளை இம்முறை வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வாக்குச்சீட்டில், அந்தந்த பகுதிகளில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களின் பெயர்களும் சின்னங்களும் மாத்திரமே காணப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லும் வாக்காளர்கள் தங்களின் ஆள் அடையாளத்தை உறுதி செய்யக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை கொண்டு செல்வது கட்டாயமானது என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளையும் கொண்டு செல்வது அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்கு 65,000 பொலிஸார் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பொலிஸ் நடமாடும் சேவை இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக தாம் வாக்களித்ததன் பின்னர் ஆங்காங்ககே தரித்து நிற்பதை தவிர்குமாறு வாக்காளர்களிடம் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, 11,300 உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் இம்முறை தேர்தல் கண்காணிப்புகளுக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களோடு சர்வதேச கண்காணிப்பாளர்களும் நாடளாவிய ரீதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் இரவு 8.30 இற்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.