கழுத்தறுப்பேன் என்றவரைக் காப்பாற்றியதன்மூலம் ஜனாதிபதியின் நல்லாட்சி முகமூடி கழன்று தொங்குகின்றது -ஐங்கரநேசன் காட்டம்

கழுத்தறுத்துக் கொலை செய்வேன் என்று மிரட்டியதால் பதவியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்ட, இலண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரை உடனடியாகவே மீளவும் பணியில் அமர்த்தியதன் மூலம் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சி முகமூடி கிழிந்து தொங்க, தானும் பேரினவாதத்தை வெளிப்படுத்துவதில் யாருக்கும் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபித்து இருக்கிறார் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் வடமாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார். 
இவ்விவகாரம் தொடர்பாக அவர் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில்,
இலங்கை சுதந்திரதினத்தன்று இலண்டனில் உள்ள இலங்கைத் தூதரத்தின் முன்பாக அமைதியான வழியில் தமது எதிர்ப்பை வெளிக்காட்டிய எமது தமிழ் உறவுகளை நோக்கி, தூதரகப் பாதுகாப்பு அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ கழுத்தறுத்துக் கொலை செய்வேன் என்று சைகை மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த இழிசெயலைக் காணொலி மூலம் கண்ணுற்ற உலகம் பெரும் அதிர்ச்சியில் உறைந்தது. ஜனநாயக விழுமியங்கள் உச்சமாக மதிக்கப்படுகின்ற நாட்டில், அந்நாட்டின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு அமைதி வழியில் எதிர்ப்பை வெளிக்காட்டியவர்கள்மீது சைகையினாலேனும் குரோதத்தை வெளிப்படுத்துவது அநாகரிகமான குற்றமாகவே கருதப்படும். இதனால் உலக அரங்கில் தனது பெயர் களங்கப்பட்டுவிடும் என்ற அச்சத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சு அவரைப் பணியில் இருந்து உடனடியாகவே இடைநிறுத்தியது. ஆனால், அதைவிட வேகமாக, நல்லாட்சி அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பாதுகாப்பு அதிகாரியின் பதவி இடைநிறுத்த அறிவிப்பை மீளப்பெற்று அவரை மீளவும் பதவியில் அமர்த்தி அழகு பார்த்துள்ளார். இதன்மூலம் அவரது நல்லாட்சி முகமூடி கிழிந்து தொங்க, தானும் பேரினவாதத்தை வெளிப்படுத்துவதில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் எவருக்கும் தான் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபித்திருக்கிறார்.
மைத்திரிபால சிறிசேன அவர்களை நாட்டின் ஜனாதிபதியாக்கிய வாக்குகளில் தமிழ் மக்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. அதை அவரே பல தடவைகள் வெளிப்படுத்தியும் உள்ளார். தமிழின அழிப்புப்போரை முன்னெடுத்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் அரசில் இவர் ஒரு பங்காளியாக இருந்தபோதும், நல்ல மாற்றம் ஒன்றுக்காக ஏங்கிய தமிழ் மக்கள் கையறு நிலையிலேயே இவருக்கு வாக்களித்தார்கள். ஆனால், இவரே நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியுடன் தற்போது ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளினால், தன்னைத் தக்கவைக்க எல்லாத் தென்னிலங்கை அரசியல்வாதிகளையும் போலவே இனவாதத்துக்குத் துணைபோய்த் தன்னைப் பலப்படுத்த முனைந்து வருகிறார். அதன் ஒரு வெளிப்பாடேதான் இந்தச் சம்பவம் ஆகும்.
பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ வன்னியுத்தத்தில் ஒரு படையணியைத் தலைமையேற்று வழிநடத்தியவர். அமைதிவழிப் போராட்டத்தையே சகித்துக்கொள்ள இயலாமல், கழுத்தை அறுத்துக் கொலை செய்வேன் என்று பிரித்தானியாவில் பல்லாயிரம்பேர் பார்த்திருக்க மிரட்டிய இவர் வன்னிப் போராட்டக் களத்தில் எம்மவர்களுக்கு என்னவெல்லாம் செய்திருப்பார் என்று ஊகிப்பது கடினாமான காரியம் அல்ல. ஆனால், வன்னி யுத்தக் குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் செய்து தனது படையினருக்குத் தண்டனைகள் தரத்தயாராக இல்லாத நல்லாட்சி அரசாங்கம் இலண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நடந்த இந்தச் சம்பவத்துக்கு மட்டும் தண்டனை தரும் என்று நாம் எதிர்பார்க்க முடியாதுதான். எனினும், இந்த அரசாங்கத்தின்மீதும், ஜனாதிபதியின் மீதும் நம்பிக்கை இழந்து போய்க்கொண்டிருக்கும் தமிழ்மக்களிடையே மீளவும் நம்பிக்கையைக் கட்டிவளர்க்க அவர் உளமார விரும்பினால், பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவின் இனக்குரோதச் செயல் தொடர்பான விசாரணையைத் துரிதப்படுத்தி, அதற்கான தண்டனையைத் தந்தேயாகவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.