தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவடைந்த நிலையில் பொலிஸாருக்கு விடுக்கப்பட்ட இறுக்கமான உத்தரவு!!

அனைத்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளன. 

இதன்படி இனிவரும் நாட்களில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதும், அதுசார்ந்த கூட்டங்கள், சந்திப்புகள் என்பவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.அத்துடன், பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை காட்சிப் படுத்துவதும் தடைவிதிக்கப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், வேட்பாளர்கள் தங்களது வாகனத்தில் கட்சியின் சின்னத்துடனான கொடியை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.ஆனால், வாகனத்தில் சுவரொட்டிகளை அல்லது பதாதைகளை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தேர்தல் விதிமுறைகளை இறுக்கமாக கடைபிடிக்க அனைத்து காவற்துறை நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.விதிமுறைகளை மீறுகின்ற யாரையும் உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, தேர்தல் காலத்தில் மொத்தமாக 65 ஆயிரத்து 758 காவற்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர, காவற்துறை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர்களில் 26 ஆயிரத்து 480 பேர் வாக்குச் சாவடிகளில் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.அவர்களுக்கு மேலதிகமாக தேர்தல் வாக்குச் சாவடிகளுக்கு இடையில் நடமாடும் காவற்துறை சேவையும் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், மாவட்ட ரீதியாக 140 கலகம் அடக்கும் காவற்துறை பிரிவுகளும் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.