தேர்தல் பணிகளுக்காக பஸ்கள் அனுப்பப்பட்டமையால் பஸ் சேவை இடம்பெறவில்லை-அரச அதிபர்

வலி.வடக்கில் நேற்றுமுன்தினம் திறக்கப்பட்ட பொன்னாலை- பருத்தித்துறை வீதியின் ஊடான போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தம்மிடம் பேருந்துகள் இல்லாமையாலேயே இச் சேவை இடை நிறுத்தப்பட்டிருந்ததாக இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை கிளை தெரிவித்துள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த வீதியின் ஊடான போக்குவரத்தானது நேற்றுமுன்தினம் உத்தியோகபூர்வமாக அரச அதிபர் மற்றும் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், இப் பாதையின் ஊடான பேருந்து போக்குவரத்தானது தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் குற்றசாட்டியிருந்த நிலையில் இது தொடர்பாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில்; குறித்த பாதையூடான பேருந்து சேவை இடம்பெறவில்லை என இராணுவத்தினரும் என்னிடம் தொடர்பு கொண்டு கேட்டிருந்தனர். இதன் பின்னரே நான் குறித்த வீதியூடான போக்குவரத்து சேவைக்குரிய இலங்கை போக்குவரத்து சேவைக்குரிய பருத்தித்துறை கிளையினரை தொடர்பு கொண்டு பேசியிருந்தேன்.
இதன் போது அவர்கள், தேர்தல் செயற்பாடுகளுக்காக பத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளை தேர்தல் திணைக்களத்திற்கு ஒப்படைத்துள்ளமையால் தம்மிடம் இச் சேவையில் ஈடுபட பேருந்து இல்லையென குறிப்பிட்டனர். எனினும் எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து சீரான பேருந்து போக்குவரத்து ஈடுபடும் எனவும் அவர்கள் என்னிடம் தெரிவித்திருந்தார்கள் என அரச அதிபர் தெரிவித்தார்.​