அபிவிருத்திக்கான ஆணையும் நிறைவேறவில்லை. அரசியல் தீர்வுக்கான ஆணையும் நிறைவேற்றப்படவில்லை – சிவசக்தி ஆனந்தன் எம்.பி

தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு மக்களால் வழங்கப்பட்ட அபிவிருத்திக்கான ஆணையும் நிறைவேறவில்லை. அரசியல் தீர்வுக்கான ஆணையும் நிறைவேற்றப்படவில்லை. அதன் காரணமாகவே மாற்றம் அவசியமகியிருக்கின்றது. அந்த மாற்றத்திற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று வவுனியாவில் நடைபெற்ற தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியா கலைமகள் விளையாட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோது, அவர் மேலும் தெரிவித்ததாவது:
பாராளுமன்ற குழு கூட்டம், தமி;ழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு கூட்டங்களிலே திரும்பத் திரும்ப பல விடயங்களைச் சுட்டிக்காட்டினோம். 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது திரும்பத் திரும்பச் சொன்னோம். இந்த நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள், தமிழ்த்தலைவர்களை ஏமாற்றியதுதான் வரலாறு. ஆகவே இந்த அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க முடியாது. நிபந்தனையோடுதான் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவ வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.

ஆனால் சம்பந்தன் ஐயா தமிழ் மக்கள் சார்பில் விதிக்க வேண்டிய நிபந்தனைகளைக் கைவிட்டு, இந்த ஆட்சி மாற்றத்திற்கு எத்தனை மில்லியன் பணம் எங்களுக்குத் தருவீர்கள் என்று அவர் பணத்தைத்தான் நிபந்தனையாக வைத்தாரேயொழிய, தமிழ் மக்களுடைய கோரிக்கைகளை நிபந்தனையாக வைப்பதற்குத் தவறியிருக்கின்றார். இதற்கு அப்பால் 2009 ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்ட யுத்தத்தில் எத்தனையோ ஆயிரம் பொதுமக்களும் போராளிகளும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுடைய உயிர்த்தியாகம்தான் இன்றைக்கு மனித உரிமைகள் பேரவையின் கதவுகளைத் தட்டியது.

எனவே பல ஆயிரம் பேரின் உயிர்த்தியாகங்களில் இருந்து எங்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை சம்பந்தன் ஐயா தன்னுடைய வயது அனுபவத்தில் இருந்தும் தனது சட்டப் புலமையில் இருந்தும் இராஜதந்திர ரீதியாக எந்த அளவு தூரம் பயன்படுத்தி இருக்கின்றார்? எதுவுமே இல்லை. 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர், ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கமும், மனித உரிமைப் பேரவையும் இணக்கம் தெரிவித்த விடயங்களில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் பாராளுமன்றத்திலும்சரி, வெளியிலும்சரி அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுத்தாரா, எதுவுமே இல்லை. அல்லது ஜனநாயகப் போராட்டங்களின் ஊடாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தாரா, அதுவும் இல்லை.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குகிறோம். இராணுவத்தைக் குறைக்கிறோம். தமிழ் மக்களுடைய காணிகளை ஒப்படைக்கிறோம். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தைத் திறக்கிறோம். இந்தப் பிரச்சினை ஏன் தோன்றியது. இது மீண்டும் தோன்றாமல் இருப்பதற்கான அரசியல் தீர்வை முன்வைககிறோம் என்று ஐநா மனித உரிமைப் பேரவையில் அரசாங்கம் பல வாக்குறுதிகளை வழங்கியது.

அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசுக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கினார்கள். திரும்பவும் இரண்டு வருட கால அவகாசத்தை பாராளுமன்றத்தில் உள்ள கூட்டமைப்பின் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொடுத்தார்கள். இந்த கால நீடிப்பைப் பெற்றுக்கொடுத்ததனால் இன்றைக்கு சர்வதேச விசாரணை இல்லை. கலப்பு விசாரணையும் இல்லை. உள்ளக விசாரணையும் இல்லை. பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவில்லை. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. காணிகளும் விடுவிக்கப்படவுமில்லை.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் இன்றைக்குப் பாராளுமன்றத்தில் வாயை இறுக்கி மூடிக்கொண்டிருக்கின்றார். அதுமட்டுமல்ல. பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் 16 பாராளுமன்ற உறுப்பினர்களையும் இருத்தி வைத்து, இந்த அரசாங்கத்திற்கு எதிராகக் கடுமையாகப் பேசாதீர்கள். இந்த அரசாங்கத்திற்கு மக்களைத் திரட்டி அரசாங்கத்திற்கு எதிராகப் போராடாதீர்கள். இந்த அரசாங்கத்திற்கு எதிராக எதனையும் செய்யாதீர்கள் என்று சொல்கின்றார். அப்படியென்றால் எங்களுக்கு ஏன் எதிர்க்கட்சி;த் தலைவர்? நீங்கள் எதிர்க்கட்சித் தலைவரா அல்லது ஆளும் கட்சியுடன் இருக்கின்றீர்களா?

இன்றைக்கு போரினால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 21 ஆயிரம் விதவைகள் இருக்கின்றார்கள். நாற்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட காயமடைந்தவர்கள் இருக்கின்றார்கள். வட மாகாணத்திலே 12 ஆயிரம் பேருக்கு தாயில்லை. தந்தை இல்லை. அல்லது இருவரும் இல்லை. இந்த வடக்கு மாகாணத்திலே, கிட்டத்தட்ட ஆறாயிரம் கிலோ மீற்றருக்கும் அதிக நீளமுள்ள கிராம வீதிகள் குண்டு;ம் குழியுமாக இருக்கின்றன. பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு வீடுவாசல்கள் இல்லை. கிராமிய உட்கட்டமைப்புக்கள் அபிவிருத்தி செய்யப்படவில்லை. குடிப்பற்குத் தண்ணீர் இல்லை. போக்குவரத்து வசதியில்லை.

எங்களால் ஆட்சிக்குக் கொண்டு வரப்பட்ட இந்த அரசாங்கத்துடைய மூன்று வரவுசெலவுத் திட்டங்களுக்கு, என்னைத் தவிர ஏனையவர்கள் நிபந்தனையற்ற வகையில் ஆதரவு வழங்கியிருக்கின்றார்கள். பாதுகாப்பு நிதியென்று இராணுவத்திற்கு ஒவ்வொரு வருடமும் பெருமளவு நிதி ஒதுக்கப்படுகின்றது. ஆனால், இந்த இராணுவத்தினரால், ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும் சொத்தழிவுகளுக்கும், இந்த வரவுசெலவுத் திட்டங்களில் எதிர்கட்சித் தலைவரினால் எந்த அளவுக்கு அந்த நிதியைப் பெற்றுக்கொடுக்க முடிந்தது? எதுவுமே இல்லை.

வெறுமனே, இந்த மூன்றாவது வரவு செலவுத் திட்டத்திற்கும் நிபந்தனை இல்லாமல் ஆதரவு வழங்கச் சொல்லி நீங்கள் கேட்டீர்கள். நாங்கள் அந்த ஆதரவை வழங்க மாட்டோம் என்று என்னோடு சேர்ந்து பலர் சொன்னார்கள். நீங்கள் பிரதமரிடம் இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்க மாட்டோம் என்று சொல்கி;ன்றார்கள். ஆகவே நீங்கள் ஏதாவது செய்தாக வேண்டும் என்று கேட்டதற்கு அமைவாகத்தான் உங்களுக்கு 2 கோடி ரூபா நிதி அபிவிருத்தி என்ற பெயரால், பொருளாதார அமைச்சுக்கு ஊடாக உங்களுக்கு வழங்கப்பட்டது.

நீங்கள் இந்த யுத்தத்தினால் அழிந்துபோன எங்களுடைய மக்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபா பெற்றுக்கொடுக்க வேண்டிய இடத்தில், வெறுமனே இந்தத் தேர்தலில் சில வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக இந்த 2 கோடி ரூபா நிதியை, அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரால் பயன்படுத்தியிருக்கின்றீர்கள். இந்த நிதியை வாங்கியதற்குப் பிற்பாடு 2 கோடி ரூபா நிதி அபிவிருத்தித் திட்டத்திற்கு என்று கொடுத்து, இந்த வரவு செலவுத் திட்டத்தில், 15 பாராளுமன்ற உறுப்பினர்களுடைய ஆதரவைப் பெற்றிருக்கின்றீர்கள் என்று, நான் பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறேன். ஆனால் இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகத் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்திருக்கின்றது என கேட்டேன். நான் உரையாற்றியபோது பாராளுமன்றத்தில் இருந்தவர்கள் ஒருவர்கூட எனக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

இன்றைக்கு இரண்டு மாதங்கள் கழிந்த பின்னர் மண்ணெண்ணெய் பட்ட சாரைப்பாம்பைப் போல பதறியடிக்கின்றீர்கள். யாரை ஏமாற்றப் பார்க்கின்றீர்கள்? இதைத்தான்; நான் பகிரங்கமாகச் சொன்னேன். பாராளுமன்றத்தில் சொன்னதைத் தான் இப்பவும் சொல்கிறேன். மாவை சேனாதிராஜா 100 கோடி ரூபா மான நட்டயீடு கேட்டு எனக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறாராம்.

அந்த கடிதத்தை நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். என்னுடைய சட்டத்தரணி ஊடாக அவருக்குத் தக்க பதில் கொடுக்கத்தான் இருக்கிறேன். நாங்கள் மக்களுடைய பிரதிநிதிகள். நாங்கள் செய்கின்ற எந்தவொரு காரியமும் மக்களுக்குத் தெரிய வேண்டும். மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டியவர்கள்தான் நாங்கள்.

வடக்கு கிழக்கு மாகாணங்களிலே 38 உள்ளுராட்சி சபைகளிளே ஒருசில சபைகளைத் தவிர தமிழரசுக் கட்சியிடம் கொடுக்கப்பட்ட அத்தனை சபைகளிலும் ஊழல் மோசடிகள்தான் இடம்பெற்றது. வடமாகாண சபையிலே, 38 பேரிலே 30 உறுப்பினர்களை மக்கள் தெரிவு செய்துவிட்டார்கள். நான்கு அமைச்சர்கள் ஊழல் காரணமாக ஓய்வு பெற்ற ரெண்டு நீதிபதிகளை நியமித்து முதல் கட்ட விசாரணைகள் முடிந்து, இரண்டாம் கட்ட விசாரணைகள் தொடங்கும்போது, ஆளும் கட்சியோடு சேர்ந்து ஒரு லட்சத்து 32 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற முதலமைச்சரைத் தூக்கி எறிவதற்கு இவர்கள் வெளிக்கிட்டார்கள்.
இரவோடு இரவாக ஆளுனரிடம் சென்றார்கள்.

அவர்களில் இருவர் தாங்கள் தான் அடுத்த முதலமைச்சர் என்று சொல்லி அதற்கான உடுப்பையும் தைத்து வைத்துவிட்டுத்தான் ஆளுனரிடம் சென்றார்கள். அந்த சதி முயற்சியை எங்களுடைய மாகாண சபை உறுப்பினர்கள் முறியடித்தார்கள்.
நாங்கள் அபிவிருத்தி செய்யப் போகின்றோம் எங்களுக்கு வாக்களியுங்கள் என இப்போது கேட்கின்றார்கள். கடந்த காலத்திலே நீங்கள் என்ன அபிவிருத்தி செய்தீர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அபிவிருத்தி செய்வதற்காக மக்கள் தந்த ஆணையை நீஙகள் மதிக்கவில்லை. அரசியல் ரீதியாகவும் உங்களால் எதையும் பெற்றுக் கொடுக்க முடியவில்லை.

நாங்கள் மக்களுக்காகவே நிற்கின்றோம். யுத்தம் நடைபெற்றபோதும் இந்த மண்ணிலேதான் நாங்கள் நின்றோம். அநீதிகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் மக்களுக்காகக் குரல் கொடுத்தோம். அதேபோல தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள்ளே, இந்தத் தமிழரசுக் கட்சியுடைய சர்வாதிகாரத்தைத் திருத்துவதற்காக நீண்ட காலமாக நாங்கள் உட்கட்சி ஜனநாயகப் போராட்டத்தை நடத்தினோம். ஆனால் அவர்களைத் திருத்த முடியவில்லை.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்;டதோ அந்த நோக்கத்தை இவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. எனவேதான் ஒரு மாற்றுத் தலைமை அவசியமாகியிருக்கின்றது. எங்களிடம் இருப்பது வாக்குப் பலம் மட்டும்தான் அந்த வாக்குப்பலத்தைப் பயன்படுத்தி ஒரு மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். அதற்காக நீங்கள் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like