‘சுதந்திரத்திற்காக போராடும் தமிழர்கள்’ – வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்!

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினமான இன்று, ‘சுதந்திரத்திற்காக போராடும் தமிழர்கள்’ என்ற வாசகத்துடன் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், ”70ஆவது சுதந்திர தினத்தினை கொண்டாடும் ஸ்ரீலங்காவின் சிங்கள மக்களுக்கு வாழ்த்துக்கள். இப்படிக்கு தொடர்ந்தும் சுதந்திரத்திற்காக போராடும் தமிழர்கள்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாதையை மக்கள் தாங்கியிருந்தனர்.

அத்தோடு, ‘தமிழ் அரசியல் கைதிகள் இன்றும் இலங்கை சிறையில்’, ‘ஸ்ரீலங்காவில் காணாமல் ஆக்கப்பட்டோர் 20000 தமிழர்கள்’, ‘தமிழர்களை கடத்தவும் சிறையில் வைக்கவும் உருவானதே பயங்கரவாத தடைச்சட்டம்’ என்ற வாசகங்களும் குறித்த பதாதையில் பொறிக்கப்பட்டிருந்தன.

இறுதி யுத்தத்தின் போது கடத்தப்பட்டும், ராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களின் உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி, அவர்களது உறவினர்கள் வவுனியாவில் கடந்த 346 நாட்களாக சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.