வாள்வெட்டுக் குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்களுக்குப் பிணை இக்ரமின் மறியல் நீடிப்பு

கொழும்பு மற்றும் வவுனியாவில் பதுங்கியிருந்தவேளை கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸாரால் கூறப்பட்ட இக்ரம் தவிர்ந்த ஏனைய 5 பேரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று பிணையில் விடுவித்தது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவித்து பொலிஸாரால் தேடப்பட்டுவந்தவர்களான முஸ்லிம் இளைஞரான இக்ரம் உள்ளிட்ட மூவர் கொழும்பு புறநகர் பகுதியில்வைத்து கடந்த நவம்பர் 28ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். அடுத்த இரண்டு நாள்களில் வவுனியா நகர் பகுதியில் வைத்து மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் 6 பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் கடந்த நவம்பர் 30ஆம் திகதி தொடக்கம் சுமார் இரண்டு மாதங்களாக தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் மொகமெட் இக்ரமுக்கு எதிராக 4 வழக்குகளைப் பொலிஸார் தாக்கல் செய்திருந்தனர். அந்த நான்கு வழக்குகளில் இரண்டில் ஏனையவர்களில் நால்வரும் ஒரு வழக்கில் 5 பேரும் சந்தேகநபர்களாக இணைக்கப்பட்டிருந்தனர்.
4 வழக்குகளும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தன. சந்தேகநபர்கள் 6 பேரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபர் இக்ரமிடம் கைக்குண்டு மீட்கப்பட்டதாகத் தனியாக முன்வைக்கப்பட்ட வழக்கில் அவரது விளக்கமறியல் வரும் 16ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டது. 
ஏனைய 3 வழக்குகளிலும் இக்ரம் உள்ளிட்ட 6 சந்தேகநபர்களையும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு ஆள் பிணையில் விடுவித்து நீதிவான் உத்தரவிட்டார்.
இக்கிரம் உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்களும் வழங்கிய தகவலின் அடிப்படையில் 6 வாள்கள், 2 கைக்கோடாரிகள் மற்றும் கைக்குண்டு ஒன்று என்பன கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.