ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் 5ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகிறார்

நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் 5ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகிறார்.
யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பரப்புரைக் கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.
அத்துடன் பொதுஜன பெரமுண கட்சியின் சார்பில் யாழ்.மாவட்டத்தின் 13 உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஆதரவை வழங்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாளை வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தருகிறார்.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நாளை இடம்பெறும் பொதுஜன பெரமுணவின் பரப்புரைக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச உரையாற்றுகிறார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் வரும் 6ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகிறார்.
யாழ்ப்பாணம் நல்லூர் கிட்டுப் பூங்காவில் இடம்பெறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.
இதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், ஆதரவாளர்களும், வேட்பாளர்களின் செயலகங்களும் தாக்கப்படும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி நடக்கவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன.
வடக்கு, கிழக்கில், அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை நடத்தி வருவதுடன், வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் பரப்புரைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள், வடக்கில் அதிகம் இடம்பெற்றுள்ளன.
அதேவேளை, கிழக்கில் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும், தேர்தல் செயலகங்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் அதிகளவில் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுக்கும் நோக்கில், வடக்கு, கிழக்கில் குறிப்பாக, யாழ்ப்பாணக் குடாநாட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 
மேலதிகமாக பொலிஸாரும், சிறப்பு அதிரடிப்படையினரும், பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.