காங்கேசன்துறை சொகுசு மாளிகை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு?

வடக்கு மாகாணசபை, யாழ். பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கோரிக்கைகளைப் புறக்கணித்து, காங்கேசன்துறையில் மகிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட சொகுசு மாளிகையை வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் கையளிக்கும் முனைப்பில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கேசன்துறையில் முன்னைய ஆட்சிக்காலத்தில் சொகுசு அதிபர் மாளிகை ஒன்று அமைக்கப்பட்டது.
20 சிறப்பு அறைகள், சொகுசு வசதிகள், இரண்டு நீச்சல் தடாகங்கள், மற்றும் வதிவிட வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்த மாளிகை பற்றிய இரகசியங்கள், 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின் அம்பலமாகின.
இந்த சொகுசு மாளிகையை தமது தேவைக்குப் பயன்படுத்தப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபராகப் பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.
இந்த நிலையில், காங்கேசன்துறை சொகுசு மாளிகையை, ஒரு விடுதியாக நடத்துவதற்கு தம்மிடம் கையளிக்குமாறு வடக்கு மாகாணசபை கோரிக்கை விடுத்திருந்தது.
கல்வி மையமாகப் பயன்படுத்துவதற்கு அதனைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு யாழ். பல்கலைக்கழகமும் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, காங்கேசன்துறை சொகுசு மாளிகையை நாட்டுக்கு வருமானம் தேடித் தரும் நட்சத்திர விடுதியாக மாற்றப் போவதாக தெரிவித்துள்ளார்.
கேள்விப்பத்திரங்களுடன் பல அனைத்துலக முதலீட்டாளர்கள், தமது செயலகத்தை அணுகியுள்ளனர் என்றும், இதனைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரியுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.