அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

SAITM நிறுவனத்தின் பெயரை மாற்றி, சட்டமயமாக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நுகேகொடை விஜேராம சந்திக்கு அருகில் இந்த பேரணி ஆரம்பமானது.

இந்தப் பேரணியை தடுக்கும் வகையில் கங்கொடவில மற்றும் கொழும்பு நீதவான் நீதிமன்றங்கள் இரண்டு தடையுத்தரவுகளைப் பிறப்பித்திருந்தன.

அதனைக் கருத்திற்கொள்ளாமல் மாணவர்கள் செயற்பட்டதுடன், தெல்கந்த பிரதேசத்தில் நுகேகொடை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை பொலிஸார் மாணவர்களுக்கு காண்பித்தனர்.

எனினும், கிருலப்பனை – தும்முல்ல ஊடாக பேரணி கொள்ளுப்பிட்டியை அடைந்தது.

இதன்போது கொழும்பு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தடையுத்தரவை பொலிஸார் காண்பித்த போதிலும், அதனையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் செயற்பட்டனர்.

இவ்வாறு நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டமையால் அவர்களைக் கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர்.