விஷ்ணு கிரந்தி

வேறு பெயர் : அபராசி , பராசிதம் , விட்டுணுக்கிராந்தி

தாவரவியற் பெயர் : Evolvulus alsinoides
இது இலங்கை, இந்தியா முற்றிலும் பயிராகும் பூண்டு. வறட்சியான பிரதேசங்களில் அதிக அளவில் வளர்கின்றன. இது ஒரு சிறிய செடி, தும்பை இலையைப் போன்ற இலையுடன் நீல நிறத்தில் புஷ்பிக்கும் . விஷ்ணு கிரந்திக்கு கொடி, சுரத்தாற் பிறந்த சளி, உட்சூடு, கோழை , இருமல் , வாதரோகங்கள் ஆகியன நீங்கும். விஷ்ணு கிரந்தி பொடியை இளவெந்நீருடன் சேர்த்துக் குடித்துவரின் பிள்ளைப் பேறு உண்டாகும். மருத்துவப் பயன்பாடுகளாவன;
வயிற்றுப் போக்கு குணமாக…
ஒரு கைப்பிடி அளவு இலையை சுத்தம் செய்து ஒரு சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து வதக்கி 200 மி.லீ தண்ணீர் விட்டு பாதியளவுக்குச் சுண்டக் காய்ச்சிய கஷாயத்தை காலை,மாலையாக கொடுத்து வந்தால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
வீரிய விருத்தி உண்டாக…
1/2 கைப் பிடி அளவு விஷ்ணு கிரந்தியுடன் 3 வெள்ளைப்பூண்டு பற்கள் , 1/2 தே. க. அளவு சீரகம் சேர்த்து மைபோல அரைத்து நரம்புத் தளர்ச்சியினால் கஷ்டப்படுகின்றவர்களுக்கு கொடுத்து வந்தால் வீரிய விருத்தி உண்டாகும். இந்த வகையில் இது ஒரு அபூர்வ சஞ்சீவி போல வேலை செய்யும்.
இருமல் குணமாக…
விஷ்ணு கிரந்தைச் செடியை வேரோடு பிடுங்கி நன்கு கழுவி அரைத்து பசுவின் பாலில் கலந்து கொட்டைப் பாக்குப் பிரமாணம் காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
விஷ்ணு கிராந்தி சமூலத்தில் 45 கி. எடுத்து ஒன்றிரண்டாக இடித்து ஒரு மட்பாண்டத் தில் போட்டு 800 மி.லீ. நீர் விட்டு 1/4 பங்காக சுண்டக் காய்ச்சி வடிகட்டி வேளைக்கு 60 90 மி.லீ. வீதம் தினம் 3 வேளை பெரியவர் கட்கு கொடுத்து வர இருமல் தணிவடையும் .
குளிர்ச்சுரத்திற்கு…
விஷ்ணுகிரந்தி , முதியோர் கூந்தல், சிறுதேக்கு, கண்டங்கத்திரி வேர், பெருங்குரும்பபை, கீழா நெல்லி, கொத்தமல்லி விதை, மரமஞ்சள், நிலக்குமிழ் , சுக்கு, அதிவிடயம், கோஷ்டம் , நிலவேம்பு, அதிமதுரம் வகைக்கு 5.2 கி.வீதமெடுத்து இடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு 625 மி.லீ. தண்ணீர் விட்டு அடுப்பின் மேலேற்றி 150 மி.லீ. அளவாக காய்ச்சி அதனுடன் இந்துப்பு, தேன், திப்பிலிச் சூரணம் இவைகளை சேர்த்து உட்கொள்ளவும். குளிர்ச் சுரம் முதலானவை குணமாகும்.
செரியாவை, கழிச்சலுடன் கூடிய சுரத்திற்கு…
விஷ்ணு கிரந்தி சமூலம் ஒரு கைப்பிடி, துளசி ஒரு கைப் பிடி இத்துடன் 8 பங்கு நீர் விட்டு எட்டிலொன்றாய் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை பாதி பாதியாக பருகி வர குணமாகும்.