குழந்தைகளின் போஷாக்கில் பாற்பொருட்களின் முக்கியத்துவம்

தேசத்தின் சமூக, பொருளாதார அபிவிருத்தியில் ஆரோக்கியமான குழந்தைகள் என்பது சிறந்த அத்திவாரமாக அமைகின்றது. குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சி என்பது உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் இடம்பெறும் வளர்ச்சி என பொருள்படும்.
இந்த வளர்ச்சியை பெற குழந்தையின் பெற்றோர்கள் பாக்கியசாலிகளாக அமைந்திருப்பதுடன், முழுத் தேசத்துககும் இது இன்றியமையாததாக அமைகின்றது. அண்மைக்காலங்களில் இலங்கை குறிப்பிடத்தக்களவு அபிவிருத்தியை எய்தியிருந்த போதிலும் சிறுவர் போசாக்கு
என்பது பெருமளவு வளர்ச்சி காணவில்லை. 2006/2007 காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வுக்கு அமைவாக இலங்கையில் உள்ள 5 வயதுக்கு குறைவான சிறுவர்களில் 29.9 வீதமானவர்கள் அனிமியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இதே வயதைச் சேர்ந்த 29 வீதமானவர்கள் விற்றமின் ஏ குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கண்டறியப்பட்டிருந்தது.
குழந்தையின் போசாக்குத் தேவைகள், பசி மற்றும் உணவு உள்ளெடுப்பு போன்றன அவர்களின் வெவ்வேறு வளர்ச்சிக் காலப் பகுதிக்கேற்ப வேறுபடும். உதாரணமாக குழந்தை பிறந்தது முதல் ஆறு மாத காலப்பகுதிக்கு தாய்ப்பாலூட்டல் என்பது மட்டுமே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குழந்தை படிப்படியாக வளர்ச்சியடையும் போது வீட்டில் உட்கொள்ளும் சாதாரண உணவுகளுக்கு பழக்கப்படுத்தப் படுகின்றனர்.
ஆயினும் குழந்தைகளை சாதாரண உணவுகளுக்கு மாற்றமடையச் செய்யும் போது தாம் மிகவும் கஷ்டத்தை எதிர்நோக்குவதாக பெற்றோர்கள் முறைப்பாடு செய்வதை பொதுவாக அவதானிக்க முடிகிறது. குழந்தை பல மாற்றங்களை எதிர்நோக்கும் போது எதிர்கொள்ளும் சில பொதுவான அம்சங்களாக அமைந்துள்ளன.
குழந்தையின் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சி போன்ற விடயங்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குத் தேவையான சகல விதமான போசாக்கு தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பது உறுதி செய்யப்பட வேண்டும். இல்லாவிடின் நீண்ட காலப் போக்கில் பாதகமான விளைவுகளை உண்டு பண்ணக்கூடும்.
குழந்தையின் முதல் ஐந்து முதல் ஏழு வருடங்கள் வரையிலான காலப் பகுதி என்பது முக்கியமான வளர்ச்சி இடம்பெறும் காலமாகக் கருதப்படுகின்றது. இயக்கப்பாட்டுத் திறன், கணிதபூர்வ மற்றும் தர்க்கமுறையில் சிந்திக்கும் ஆற்றல் மற்றும் உடல் ரீதியான வளர்ச்சி போன்றன இடம்பெறுகின்றன.
இலங்கையில் தாய் ஒருவர் உணவைக் கொண்டு பிள்ளையின் பின்னே ஊட்டுவதற்காக அலைந்து திரிவது சாதாரணமாக காணக்கூடிய ஒரு விடயமாக அமைந்துள்ளது. குழந்தை உண்பதற்கு அதிகளவு அக்கறை செலுத்துவதில்லை. இந்த வகையிலான உணவு வழங்கும் முறையின் மூலம் குழந்தைக்கு உணவின் மீது வெறுப்பு மேலும் அதிகரிக்கும். மேலும் சில பெற்றோர் தமது குழந்தைகளுக்கு இனிப்பு தின்பண்டங்களை வழங்கி சோற்றை உண்ண வைக்கின்றனர்.
இவை தவறான பழக்க வழக்கங்களாகும். இதன் காரணமாக குழந்தைகள் மத்தியில் ஆரோக்கியமற்ற உணவு உட்கொள்ளும் முறை ஏற்படுகிறது. குழந்தை தன்னைப் புதிய உணவுக்கு பழக்கப்படுத்தி கொண்டதன் பின்னர் பெற்றோர் சமநல ஆரோக்கியமான உணவை வெவ்வேறு முறைகளில் சமைத்து விதம் விதமாக வழங்க வேண்டும்.
இதன் மூலமாகவே குழந்தை புதிய சுவைகளுக்கு தன்னை பழக்கப்படுத்திக் கொள்ளும். இதற்கமைவாக குழந்தை வளரும் போது அதன் உணவு முறையும் சீரானதாக அமைந்திருக்கும்.
வயது வந்தவர்கள் ஆர்வமாக ஒரு செயற்பாட்டில் ஈடுபட்டால், களைப்புடன் காணப்பட்டால் அல்லது தூக்கமான நிலையில் காணப்பட்டால் பசியை உணரமாட்டார்கள். இது சிறுவர்களுக்கும் பொருந்தும். குழந்தைக்கு சமநல மற்றும் ஆரோக்கியமான உணவை அதற்குப் பிடித்தமான முறையில் உள்ளெடுப்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும்.
சமநல உணவு வேளையில் புரதம், காபோஹைதரேட், கொழுப்பு, விற்றமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் போன்றன உள்ளடங்கியிருக்கும்.இவை அனைத்தும் குழந்தையின் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. சமநல உணவு என்பது வெவ்வெறு உணவுப் பிரிவுகளின் சேர்மானமாகும்.
உதாரணமாக தானிய வகை உணவுகள் (சீரியல் உணவுகள், அரிசி, பாண் மற்றும் கிழங்கு வகைகள்) மரக்கறிகள் மற்றும் பழங்கள், புரத உணவு ( இறைச்சி, மீன், முட்டை மற்றும் அவரை வகைகள்) பால் மற்றும் பாலுணவுகள் உணவுக் கூம்பகத்தின் மூலம் தேவைப்படும் உணவின் அளவு தெளிவுபடுத்தப்படுகின்றது.
பால் மற்றும் பாலுணவுகள் போன்றன குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமான தயாரிப்புகளாகும். குழந்தைகளின் உணவு வேளையிலிருந்து இவை தவிர்த்துக் கொள்ள முடியாதவை. பால் மூலம் கல்சியம் மற்றும் ஏனைய நுண்போசணைகள் போன்றன வளரும் எலும்புகளுக்குக் கிடைக்கின்றன. புரதம் மற்றும் சக்தி போன்றன குழந்தையின் பரிபூரண வளர்ச்சிக்கு உதவியாக அமைகின்றன.
பாலில் பொதுவாகக் காணப்படும் உள்ளடக்கமாக கல்சியம் அமைந்துள்ளது. பொதுவாக 19 50 வயதுக்குட்பட்ட வயது வந்த ஒருவருக்கு நாளொன்றுக்கு 18 வயதுக்குக் குறைந்த சிறுவன் ஒருவனுடன் ஒப்பிடுகையில் 1000 மில்லி கிராம்கள் அளவு கல்சியம் தேவைப்படுகின்றது.
18 வயதுக்கு குறைந்த சிறுவன் ஒருவனுக்கு 1300 மில்லி கிராம் கல்சியம் தேவைப்படுகிறது. பால் என்பது கல்சியம் செறிந்த உணவுப் பொருளாகும். அத்துடன் பாலில் உள்ள கல்சியம் உடலின் மூலம் இலகுவில் அகத்துறிஞ்சப்படக்கூடியது.
கல்சியத்துக்கு மேலாக பாலில் புரதம் மற்றும் சக்தி அடங்கியுள்ளன. முக்கியமாக பாலில் உள்ள சீனி லக்டோசு என அழைக்கப்படுகிறது. இது ஏனைய சீனி வகைகளைப் போலல்லாமல் பற்கள் சேதமடைவதைத் தவிர்த்து கல்சியம் அகத்துறிஞ்சலை ஊக்குவிக்கிறது.
பெரும்பாலான விற்றமின் பி வகைகள் குழந்தைகளின் நரம்பு கட்டமைப்பையும் குருதிக் கலன்களையும் விருத்தி செய்ய உதவுகின்றன. அதுபோலவே விற்றமின் ஏ கண் பார்வை மற்றும் நோயெதிர்ப்பு சக்திக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
இவை பாலில் காணப்படும் பிரதான விற்றமின்களாகும். யோகட் போன்ற பாலுணவுப் பொருட்களில் புரோபயோடிக்ஸ் எனும் போசணைப் பதார்த்தம் உள்ளடங்கியுள்ளது. இது வளரும் பிள்ளைகளின் உணவுக் கால்வாயின் சீரான செயற்பாட்டுக்கு உதவியாக அமைந்திருக்கும்.
குழந்தைகளின் உணவு வேளையில் பால் உணவுகளை உள்ளடக்க வேண்டியது கட்டாயமானதாகும். பகுதி உணவுகளாக மட்டுமல்லாமல் உணவு வேளைகளின் இடையேயும் காலை உணவு வேளைகளின் போதும் வழங்கலாம்.
குழந்தைக்கு மென்பானங்கள் மற்றும் சோடா வகைகளை உள்ளெடுப்பதை விட பாலை உள்ளெடுக்கச் செய்வதன் மூலம் நீண்ட கால அடிப்படையில் சிறந்த பலன்களைப் பெற்றுக் கொடுக்க முடியும். 1 2 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு ஒரு நாளைக்கு ஒரு குவளை பாலும் 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 12 குவளைகள் பாலும் வழங்குவது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தற்போது பெற்றோர்கள் மத்தியில் பிள்ளைகளுக்கு உடனடி உணவுகளை வாங்கிக் கொடுக்கும் பழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. இந்த உடனடி உணவுகளுக்குப் பதிலாக பால் மற்றும் பழங்களை குழந்தைகளுக்கு வழங்குவார்களாயின் குழந்தைகளுக்குத் தேவையான போசாக்கு இலகுவாக பூர்த்தி செய்யப்படும். இவ்வாறான சமநல ஆகார வேளை ஒன்றை தயாரிப்பது என்பது குழந்தையின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது