தமிழர் கலாசார உடையுடன் தைப்பொங்கல் கொண்டாடிய கனடா பிரதமர்!

கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடே கனடிய வாழ் தமிழர்களுடன் இணைந்து பாரம்பரிய முறையில் பொங்கல் பண்டிகையை இன்று கொண்டாடினார்.

கனடாவில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் ஜனவரி மாதத்தைத் தமிழ் பாரம்பரிய மாதமாகக் கொண்டாட கடந்த 2016ம் ஆண்டு அந்நாட்டு நாடாளுமன்றம் முடிவு செய்தது. அதன்படி ஜனவரி மாதம் தமிழ் பாரம்பரிய மாதமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிப்பதை அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடே வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், கனடாவில் உள்ள தமிழ் சமூக மக்களுடன் இணைந்து பிரதமர் ஜஸ்டின் இன்று(ஜனவரி 17) பொங்கல் பண்டிகை கொண்டாடினார். அப்போது, தமிழ் பாரம்பரிய ஆடையான வேட்டி அணிந்து பொங்கல் வைத்தார்.

இவ்விழாவில் டோரண்டோ மாநகர மேயர் ஜான் டோரியும் கலந்து கொண்டார். ஜஸ்டின் மற்றும் ஜான் இணைந்து பொங்கல் சமைத்தனர். தமிழில் ‘வணக்கம்’ எனக் கூறி தனது பேச்சை தொடங்கிய ட்ரூடே, “கனடா வாழ் தமிழர்கள் இந்நாட்டுக்கு முக்கிய பங்களிப்புகளை தந்துள்ளனர். கனடாவை வலுவான நாடாக மாற்ற கனடா மக்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். கனடாவை முன்நோக்கி எடுத்துச் செல்லும் வகையிலும், சிறந்த மற்றும் அனைவருக்கும் இணக்கமான நாடாக உருவாக்கத் தினமும் உழைப்போம்” என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரிலும் ட்ரூடே பதிவிட்டுள்ளார். அதில், இனிய தை பொங்கல் நல்வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.