மட்டக்களப்பில் இளைஞர்கள் இருவர் கடத்தல்: இரண்டு வேட்பாளர்கள் உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல்!

மட்டக்களப்பில் இரண்டு இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட வேட்பாளர்கள் உள்ளிட்ட ஐவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தியதை அடுத்து, அவர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாநகர சபைக்கு போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களும் அடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 14 ஆம் திகதி திரையரங்கில் இடம்பெற்ற மோதல் வலுவடைந்தமையால் குறித்த இரண்டு இளைஞர்களும் கடத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடத்தப்பட்ட இளைஞர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் இருவரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

திரையரங்கில் இடம்பெற்ற மோதலின் போது ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மோதலுடன் தொடர்புடைய இரண்டு இளைஞர்களைத் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் கடத்தியுள்ளனர்.

இந்த கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

காத்தான்குடி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like