ஜெயம் ரவியின் 25ஆவது படம்!

ஜெயம் ரவியின் 25ஆவது படத்தை மோகன் ராஜா இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேலைக்காரன் படத்தைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கும் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் மோகன் ராஜா அதை மறுத்துள்ளார். அவர் இயக்கிய ஜெயம் படத்தில் தான் ஜெயம் ரவி அறிமுகமானார். அதன்பிறகு எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் போன்ற பல படங்களை இயக்கினார்.

தொடர்ந்து தெலுங்கு படங்களை ரீமேக் செய்துகொண்டிருந்த மோகன் ராஜா, கதை திரைக்கதை எழுதி உருவாக்கிய முதல் படம் தனி ஒருவன். ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா நடிப்பில் அந்த படம் வெற்றிப்படமாக அமைய அடுத்து சிவகார்த்திகேயனை கதாநாயகனாக வைத்து இயக்கிய வேலைக்காரன் படமும் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில், மோகன் ராஜாவின் அடுத்த படத்திலும் ஜெயம் ரவி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி தற்போது ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்துள்ளார். சக்தி செளந்தர்ராஜன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். வருகிற ஜனவரி 26ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது.

டிக் டிக் டிக் படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் அடங்க மறு என்ற படத்திலும் நடித்து வருகிறார். ஜெயம் ரவியின் 24வது படம் இதுவாகும். எனவே, மோகன் ராஜா படத்தில் அறிமுகமானது போல் 25ஆவது படத்தையும் அவரது இயக்கத்திலே நடிக்க ஜெயம் ரவி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like