அதிகூடிய விலையில் தரமற்ற களைநாசினி: மன்னார் விவசாயிகள் விசனம்! (Video)

மன்னார் மாவட்டத்தில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருவதாக கவலையடைந்துள்ளனர்.

குறிப்பாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அதிகூடிய விலையில் தரமற்ற களைநாசினி விற்பனை செய்யப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் விவசாயிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

எனவே நிர்ணயிக்கப்பட்ட விலையில் தரமான மருந்து வகைகளை விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் ஒரு மூடை உரத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையாக 2500 ரூபாய் காணப்படுகின்ற நிலையில் மன்னாரில் ஒரு மூடை உரம் மூவாயிரம் ரூபாவுக்கு விற்கப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே களை நாசினி தொடர்பிலும், அதிகூடிய விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பிலும் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட தமக்கு நிவாரணத்தை பெற்றுதர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.