மலேரியாவை தடுக்கும் வயாகரா

வயாகரா என்றாலே வாலிப வயோதிப அன்பர்களுக்கானது என்றுதான் இத்தனை நாள் நினைத்து வந்தோம். ஆனால் இது நுளம்புகளால் மனிதர்களுக்கு இடையே பரவும் மலேரியா காய்ச்சலையும் தடுக்க உதவும் என்று பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
முன்பு ஒரே ஒரு விடயத்திற்காக ஆங்காங்கே பயந்து பயந்து வாங்கிக்கொண்டிருந்த வயாகரா இந்த கண்டுபிடிப்பினால் நோவால்ஜின், கிரோசின் போல ஆகிவிடுமோ என்று பலர் பதறுகின்றனர்.ஆனால் ஆராய்ச்சியாளர்கள், விறைப்புத்தன்மையை அதிகரிக்கும் இந்த வயாகரா, மலேரியாவைக் கட்டுப்படுத்த உதவுவதை நினைத்துப் பெருமை அடைகின்றனர்.
ஏனெனில் சாதாரண நுளம்பில் ஏற்படும் இந்தக் காய்ச்சல் பல ஏழை நாடுகளில் பரவலாக ஏற்படும் உயிர்கொல்லி நோயாக திகழ்ந்து வருகிறது.
நுளம்புகளின் கடியினால் வலுவிழந்து இருக்கும் சிவப்பு இரத்த அணுக்களை உடலில் இருந்து அகற்றவும் வடிகட்டி அதை நீக்கவும் இந்த மாத்திரை உதவுகிறதாம். மலேரியா தாக்கத்தினால் வலுக்குறைந்துபோன சிவப்பு இரத்த அணுக்களுக்கு வலுக்கொடுக்க வயாகரா பயனளிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
தற்போது அளிக்கப்படும் மலேரியாவிற்கான சிகிச்சைகள் முதிர்ச்சியற்றவை என்றும் வயாகரா நோய் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒட்டுண்ணிகளை முழுமையாக அழிக்க உதவும் என்றும் கூறியிருக்கின்றனர்.
நேரடியாக வயாகராவை மலேரியா தாக்கம் உள்ளவர்களுக்கு கொடுப்பதில் பிரச்சினை இருக்கின்றது. இது விறைப்புத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் மருந்து என்பதால் சில மாற்றங்கள் கொண்டுவந்த பிறகு இதை பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மலேரியா போன்ற நோய்களுக்கு தொடர்ச்சியாக மருந்து உட்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் வயாகராவை அவ்வாறு உட்கொண்டால் பக்க விளைவுகள் ஏற்படும் அபாயம் இருக்கின்றது. எனவே இம்மருந்தில் சில மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
உலகம் முழுவதும் ஆண்டுக்கு 198 மில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 5 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
இதற்கு முன்பு வரை இருந்த சிகிச்சை முறையில் 30 வீதம் வரையிலான நோயாளிகளுக்கு மட்டும்தான் முழுமையான தீர்வளித்தது. ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிகிச்சை முறைமையானது முழுமையான தீர்வளிக்கக்கூடியது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர்.
உலக அளவில் மக்கள் அஞ்சும் நோயாக கருதப்பட்டு வந்த மலேரியா நோயினால் ஏற்பட்டு வந்த உயிரிழப்புகள் இனிக் குறையும் என்றும் இது குறித்து பயந்து வந்த மக்களின் பாரம் விலகும் என்றும் தலைமை ஆராய்ச்சியாளர் டாக்டர் பிரைன் கிரீன்வூட் கூறியிருக்கிறார்.