மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயர் பணிகளை பொறுப்பேற்றார்!


தாய்ப்பங்கான யாழ்ப்பாணத்தில் இருந்து பிரிந்து 36 ஆண்டுகளில் மன்னார் மறைமாவட்டமாக மிகவும் பக்தியுடன் செயல்படும்  மன்னார் மறைமாவட்டத்திற்கு  மூன்றாவது ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருட் கலாநிதி பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ இன்றைய தினம் பணிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளார்.
குறித்த மறைமாவட்டத்தின் புதிய ஆயருக்கு 30-12-2017 இன்று காலை 9.30 மணியளவில் மன்னாரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி அமோக வரவேற்பினை வழங்கியுள்ளனர்.

மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை மற்றும் குரு முதல்வர் அருட்தந்தை விக்ரர் சோசை அடிகளார் தலைமையில் குருக்களைக் கொண்ட உப குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு வரவேற்பு இடம்பெற்றது.

தள்ளாடி சந்தியில் வைத்து மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயரான பேரருட் கலாநிதி பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ வரவேற்கப்பட்டு, மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்திற்கு அழைத்துவரப்பட்டு

அத்துடன், மன்னார் தள்ளாடி சந்தியில் வைத்து புதிய ஆயரை பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி பேராயர் நியூஜன் வன் ரொட் ஆண்டகை, கொழும்பு பேராயர் கர்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜேசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை மற்றும் மறைமாவட்ட ஆயர்கள், குருக்கள் இணைந்து மாலை அணிவித்து வரவேற்றனர்.

மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தை சென்றடைந்ததும் பேராலயத்தின் பிரதான வாயிலில் சர்வமதத் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் தலைவர்கள் என பலரும் புதிய ஆயருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்தும் பேராலயப் பங்குத்தந்தை அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் ஆசி நீர் குவளையை புதிய ஆயருக்கு வழங்க, புதிய ஆயர் அதனைப் பெற்று தானும் ஆசி நீரைப் பூசிக்கொண்டு சூழ நின்றவர்களுக்கும் ஆசி நீரைத் தெளித்துள்ளார். தொடர்ந்து மன்னார் மறைமாவட்டத்தைப் புதிய ஆயருக்குக் கையளிப்பதன் அடையாளமாக அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை பேராலயத் திறப்பை புதிய ஆயருக்குக் கையளிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து புதிய ஆயரின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய ஆயரின் வரவேற்பு நிகழ்வு மற்றும் பணிப்பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட நிகழ்வுகளில் மறைமாவட்ட ஆயர்கள், நீதவான்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.