கலைந்த கலெக்டர் கனவு..!! கலங்கடித்த ப்ரீத்தி..!!

மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்ற கனவில் வாழ்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ப்ரீத்தி உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தில் ஆழித்தி உள்ளது .

கோவை மாவட்டம், சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ப்ரீத்தி. சிறு வயதில் இருந்தே எலும்பு வளர்ச்சியின்மையால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளியாக இருந்த பிரீத்தி, தன் குறைபாடு குறித்த எந்தவிதக் கவலையும் இல்லாமல் படிப்பில் மிகச் சுட்டியாக இருந்து வந்தார்.

கலெக்டர் ஆக வேண்டும் என்பதுதான் அவரது கனவாக இருந்தது. அதற்காக தீவிரமாக படித்து பத்தாம் வகுப்பில் 468 மதிப்பெண் வாங்கி சாதனை படைத்தார். படிப்பில் சிறந்த விளங்கிய பிரீத்திக்கு 11-ம் வகுப்பு சேர்வதில் சிக்கல் ஏற்பட்டது. 11ஆம் வகுப்பில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் செய்முறை கொண்ட பாடப்பிரிவை எடுக்க முடியாத சூழல் நிலவிவந்தது.

அத்துடன் ப்ரீத்தியால் தொலைவு சென்று மேற்படிப்பை தொடர முடியாத சூழலும் ஏற்பட்டது. இந்நிலையில் ப்ரீத்தி படிப்பதற்காகவே, அவரது பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவணன், சீஇஒ-விடம் அனுமதி வாங்கி, பிசினஸ் மேத்ஸ் என்னும் மூன்றாம் பாடப்பிரிவை பள்ளிக்கு கொண்டு வந்துள்ளார்.

அப்போதுதான் பிரீத்தி தமிழக அளவில் பேசும் பொருளாக மாறினார். இதனையடுத்து மாணவி பிரீத்தியின் பேட்டி பல ஊடகங்களில் வெளியாகி, தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளார்.

இந்நிலையில் 11ஆம் வகுப்பு விடுமுறையில் வீட்டில் இருந்த ப்ரீத்திக்கு திடீரென உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர் மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது, எலும்பு வளர்ச்சி முற்றிலும் தடைபட்டுவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்.

இதனால் பிரீத்தியின் குடும்பத்தார், சற்று கலக்கமடைந்துள்ளனர். இருப்பினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், மன தைரியத்துடன் வீட்டிற்கு வந்த அவர் படிப்பில் கவனத்தை தொடங்கியுள்ளார்.

இந்த சூழலில் உடல்நிலை மேலும் மோசமடைய ப்ரீத்தி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். பிரீத்தியின் மறைவு அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கலெக்டராக வேண்டும் என்ற கனவில் வாழ்ந்த பிரீத்தியின் தமிழக மக்களிடையே ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியது.