நாவிதன்வெளி விவேகானந்த வித்தியாலய மாணவன் சாதனை!

சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளி 15ஆம் கிராமம் விவேகானந்த வித்தியாலய மாணவன் இ.சஜீத் சமூக விஞ்ஞான போட்டியில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார் என வித்தியாலய அதிபர் க. பேரானந்தம் தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற்ற மாணவனையும், வெற்றி பெறுவதற்கு முழுமூச்சாக உழைத்த ஆசிரியர்களையும் பாராட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

குறித்த பாடசாலையில் தரம் 12 மற்றும் 13வகுப்பு பிரிவில் கலந்து கொண்டு தேசிய ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்று எமது வித்தியாலயத்திற்கும், பிரதேசத்திற்கும் பெருமை தேடித்தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பாடசாலை வரலாற்றில் தேசிய ரீதியாக இப்பாடசாலை இவ்வாறான தேசிய சாதனையை இதுவரை புரியாத நிலையிலும் சமூகவிஞ்ஞானப்போட்டியில் புரிந்துள்ளமை எடுத்துக்காட்டத்தக்கதாகும்.

இங்குள்ள மக்கள் அன்றாடம் கூலிவேலை செய்து வாழ்கின்ற நிலையிலும், வீட்டிலே வசதி வாய்ப்புக்கள், பொருளாதார கஸ்ட நிலைகள் உள்ள போதிலும் சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.

இந்த பிரதேசத்தினை பொறுத்தவரையில் பிரத்தியேக வகுப்புக்கள் இல்லாத சந்தர்ப்பத்திலும் பாடசாலை கற்றலை மாத்திரம் முழுமையாக பயன்படுத்தி இச்சாதனையை புரிந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாணவர்களின் சாதனைக்கு, வழிகாட்டியாக நின்று கற்பித்த ஆசிரியர்கள், பழயமாணவர்கள் பெற்றோர் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பாடசாலை சார்பான பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.