14 இலங்கை தமிழ் அகதிகள் காங்கேசன்துறை கடலில் கைது! (VIDEO)


தமிழகத்திலுள்ள ஈழ அகதிகள் முகாமிலிருந்து சட்டவிரோதமாக முறையில் இலங்கை திரும்பிய ஒன்பது மாத குழந்தை உட்பட 14 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

14 பேருயும் இன்று அதிகாலை 2 மணியளவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறையை அண்மித்த கடற்பரப்பில் வைத்து பருத்தித்துறை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

திருகோணமலையை சொந்த இடமாக கொண்ட இவர்கள் 2006ஆம் ஆண்டு உள்நாட்டு போர் காரணமாக கடல்வழியாக தமிழகம் சென்றுள்ளதுடன் கடந்த பன்னிரெண்டு வருடங்களாக புதுக்கோட்டையிலுள்ள இலங்கை அகதிமுகாமில் வசித்து வந்துள்ளனர்.

இவர்கள் வசித்த அகதி முகாமில் போதிய வசதிகள் இன்மை மற்றும் வதிவிடப் பிரச்சினை இருந்த நிலையில் இவர்கள் கடல் வழியாக சட்டவிரோமான முறையில் நாடு திரும்பியதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு வருகை தந்தவர்களில் ஒன்பது மாத குழந்தை உட்பட 5 சிறுவர்கள், மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் அடங்குகின்றனர்.

இவர்களை படகு மூலம் அழைத்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு படகோட்டிகளையும் கடற்படையினர் கைது செய்திருப்பதுடன் இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படடுள்ளனர்.

இவர்களை விசாரணையின் பின்னர் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தவிருப்பதாக காங்கேசன்துறை பொலிசார் தெரிவித்தனர்.