கடமை நேரத்தில் தாக்கப்பட்ட பாடசாலை அதிபர்!

ஒரு பாடசாலை அதிபர் கடமை நேரத்தில் தாக்கப்பட்டிருக்கின்றது என்பது ஒரு பாரதூரமான குற்றமாகும், இதற்குப் பொலிஸார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் கடமையில் இருந்த அதிபரை கடமை நேரத்தில் அப்பாடசாலையின் ஆசிரியை ஒருவரின் கணவர் நேற்றைய தினம் தாக்கிப் படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் அப்பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலையின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து குறித்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பணிப்பாளர், கோட்டக்கல்வி அதிகாரி ஆகியோர் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் கலந்துரையாடியதை அடுத்து பாடசாலை கற்றல் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியது.

இதன் பிறகு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள வலயக் கல்விப் பணிப்பாளர்,

ஒரு பாடசாலையின் அதிபர் கடமைநேரத்தில் தாக்கப்படுவது பாரதூரமான குற்றம், பொலிசார் இது தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும், நீதிமன்றம் தன்னுடைய கடமையைச் செய்துகொள்ளும், அதிபர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தனக்கு முறைப்பாடு கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்குசசென்று அதிபரை வைத்தியசாலையில் சந்தித்திருந்தேன்.

அதிபரைத் தாக்கிய ஆசிரியரின் கணவர் வலயக்கல்வித் திணைக்களத்திற்கு முறையிட வந்திருந்த நிலையில் நான் அவரை பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பியதுடன், இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்திற்கு நானும் கோட்டக்கல்வி அதிகாரியும் சென்று குறித்த நபரை அடையாளம் காட்டியபோது, பொலிசார் அவரைக் கைது செய்தனர்.

அதன் பின்னர் குறித்த நபர் வைத்தியசாலையில் இருப்பதாகவும் அறிந்திருக்கின்றோம், இந்த பிரச்சினை தொடர்பில் பொலிசார் அசமந்தப்போக்கை காட்டி சட்டத்தை மீறிச்செயற்படுவதுடன், இது தொடர்பில் பொலிஸ் உயரதிகாரிகளின் கவனத்திற்குக்கொண்டு செல்ல இருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like