இருட்டு அறையில் முரட்டு குத்து : திரை விமர்சனம்..!

தமிழில் ”ஹரஹர மஹாதேவகி” அடல்ட் படத்தை எடுத்த சந்தோஷ் பி.ஜெயக்குமாரின் அடுத்த படம் தான் ”இருட்டு அறையில் முரட்டு குத்து”. படத்தின் டைட்டில் முதல் ட்ரெய்லர் வரை எல்லாமே டபுள் மீனிங் வசனங்களாலும், காட்சிகளாலும் நிரம்பி வழிகின்றதாம். அந்த வகையில் இப்படத்தை முழுமையாக நோக்கினால்.. :-

பிளேபாயாக ஊர் சுற்றி வரும் நாயகன் கௌதம் கார்த்திக்குக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்கின்றனர். அதற்காக பெண்ணையும் தேடி வருகின்றனர். அவருக்கு பார்க்கும் பெண்களில் பாதி பேர் அவர் காதலித்த பெண்களின் தோழிகளாக இருப்பதால், அந்த பெண்கள் கௌதமை திருமணம் செய்துகொள்ள மறுக்கின்றனர்.

இந்நிலையில், நாயகி வைபவி சாண்டில்யாவையும் பெண் பார்க்க செல்கின்றனர். வைபவியின் தந்தை மாப்பிள்ளை தேர்வில் விசித்திரமாக செயல்படுகிறார். ஒரு பெண்ணை முழு திருப்திப்படுத்தும் மாப்பிள்ளை தான் வேண்டும் என்று அதற்காக மாப்பிள்ளைக்கு சில தேர்வுகளை வைக்கிறார். பின்னர் நாயகனையும், நாயகியையும் பேசி பழகி, அவர்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கின்றனர்.

வைபவியை பார்த்தவுடன் கௌதமுக்கு பிடித்துப் போக, இருவரும் ஒரு வாரம் தாய்லாந்துக்கு செல்ல முடிவு செல்கின்றனர். தாய்லாந்து செல்லும் கௌதம் கார்த்திக் தனது நண்பனான சாராவையும் உடன் அழைத்துப் போக முடிவு செய்கிறார். மதுபானக்கடை வைத்திருக்கும் சாராவுக்கு அவரது கடையில் சரக்கு வாங்க வந்த யாஷிகா ஆனந்த் மீது காதல். யாஷிகா ஆனந்த், கௌதம் கார்த்திக்கின் முன்னாள் காதலி. எப்போதும் குடித்துக் கொண்டே இருப்பதால் கௌதம் கார்த்திக் அவளை விட்டுப் பிரிகிறார்.

ஆனால் யாஷிகா கௌதமை அடைய நினைக்கிறாள். இப்படி இருக்க கௌதம் கார்த்திக் – வைபவியுடன், சாராவும், யாஷிகாவும் தாய்லாந்துக்கு செல்கின்றனர். அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்குகின்றனர். கௌதம் கார்த்திக்கும், சாராவும் ஒரு அறையிலும், வைபவியும், யாஷிகாவும் மற்றொரு அறையிலும் தங்குகின்றனர்.

இந் நிலையில், தங்களது ஜோடியுடன் இருக்க ஆசைப்பட்டு வீட்டில் பேய் இருப்பதாக கௌதம் கார்த்திக்கும், சாராவும் பொய் சொல்கின்றனர். ஆனால் உண்மையிலேயே அங்கு பேய் இருக்கிறது. ஆனால் கௌதம் கார்த்திக் பொய் சொல்லி தன்னுடன் தங்குவதாக நினைத்து வைபவி கோபப்படுகிறாள். இந்நிலையில் அந்த வீட்டில் இருக்கும் அனைவருக்குமே அங்கு பேய் இருப்பது தெரிய வருகிறது. இதையடுத்து வைபவியும், யாஷிகாவும் அங்கிருந்து தப்பி ஓடி விடுகின்றனர்.

ஆனால் கௌதம் மற்றும் சாரா அங்கிருந்து போக முடியவில்லை. அவர்கள் அங்கிருந்து செல்ல முடியாதவாறு அந்த பேய் அவர்களை தடுக்கிறது. இந்நிலையில், அந்த பேய் தான், இளம் வயதில் எந்த சுகத்தையும் அனுபவிக்காமல் இறந்து விட்டதாகக் கூறி தன்னை திருப்திபடுத்த நல்ல ஆண்மகனை தேடிக் கொண்டிருந்ததாக கூறுகிறது. மேலும் இருவரில் ஒருவர் தன்னுடன் உடலுறவுக் கொள்ள வேண்டும் என்றும், இந்த வீட்டில் இருந்து ஒருவர் மட்டுமே வெளியே செல்ல முடியும் என்றும் கூறுகிறது.

கடைசியில் கௌதம், சாரா இருவரும் அந்த பேயிடம் இருந்து தப்பித்தார்களா? அல்லது அந்த பேயை அவர்கள் திருப்தி படுத்தினார்களா? அல்லது பேய் அவர்களில் யாரையாவது கொன்றதா? கௌதம் கார்த்திக் நாயகியுடன் இணைந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

பிளேபாயாக வரும் கௌதம் கார்த்திக் பிளேபாயாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் கூறவேண்டும். அவர் அந்த கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்தது போன்று தெரிகிறது. குறிப்பாக பேய் வீட்டில் கௌதமும், சாராவும் செய்யும் அட்டகாசங்கள் ரசிக்கும்படியாக உள்ளது.

வைபவி சாண்டில்யா அழகான சிரிப்புடன் அவரது கதாபாத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். யாஷிகா ஆனந்த் கிளாமரில் தூக்கலாகவே வந்து ரசிகர்களை கிறங்கடிக்கிறார். சாரா இரட்டை அர்த்த வசனங்களால் சிரிப்பு மூட்டுகிறார்.

ஜான் விஜய், பால சரவணன், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், சதீஷ், ஜாங்கிரி மதுமிதா என மற்ற துணை கதாபாத்திரங்களும் ஸ்கோர் செய்துள்ளனர்.

ஹரஹர மஹாதேவகி படத்தை தொடர்ந்து, இந்த படத்தில் முழு இரட்டை அர்த்த வசனங்களுடன் திரைக்கதையை அமைத்திருக்கிறார் சன்தோஷ் பி.ஜெயக்குமார். பேய் கதையிலேயே வித்தியாசமான முறையை முயற்சி செய்திருக்கிறார். வயாகரா மாத்திரை சாப்பிட்டுவிட்டு திண்டாடுவது, உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்கும் பேய் என படம் முழுக்க இரட்டை அர்த்த வசனங்கள் தான். 18 வயதிற்குட்டோர் மட்டுமே பார்க்க வேண்டும் என்பதற்கு ஏற்ப வசனங்களும், கவர்ச்சியும் தூக்கலாகவே இருக்கிறது.

பாலமுரளி பாலுவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பாடல்களும் கேட்கும் ரகம் தான். பல்லுவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

ஆக மொத்தத்தில் ”இருட்டு அறையில் முரட்டு குத்து” ஒரு சொர்க்கத்தையே காணலாம்..!