திருகோணமலை சம்பவம் தமிழ்- முஸ்லிம் சகோதர உறவுக்கிடையே ஆபத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது

திருகோணமலையில் ஏற்பட்டுள்ள சம்பவம் நாட்டின் ஏனைய இடங்களுக்கும் விஸ்வரூபம் எடுக்காமல் பாதுகாக்க தமிழ் அரசியல் தலைவர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் உடனடியான செயற்பாடுகளில் இறங்கவேண்டுமென கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்எஸ்எஸ். அமீர்அலி வெண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த விடயத்தினை இனவாதிகள் சாதகமாகப் பயன்படுத்தி தமிழ் முஸ்லிம் சகோதர இனங்களிடையே விரிசலை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் அனைவரும் மிகக் கவனமாக இருக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஏறாவூர் மிச்நகர் பிரதேசத்தில் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலையத்திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

பிரதேச செயலாளர் வீ.யூசுப், திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர் எஸ். சிவலிங்கம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் எம்எல். அப்துல் லத்தீப் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் எம்எஸ்எம். சாதிக் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

விசேடமாக மிச்நகர் பிரதேசத்தில் அல்- குர்ஆனை மனனம் செய்துள்ள ஒரே குடும்ப உறவுகளின் மூன்று சிறுவர்கள் இங்கு கௌரவிக்கப்பட்டனர்.

மிச்நகர் பிரதேசத்தில் பாடசாலைக்கல்வியை முடித்துவிட்டு வேலைவாய்ப்பற்றிருக்கும்; 14 யுவதிகள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். ஆறு மாதகால தையல் பயிற்சியின் பின்னர் இவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படுவதுடன் தையல் இயந்திரமும் கையளிக்கப்படவுள்ளது.

பிரதியமைசச்ர் அமீரலி இங்கு தொடர்ந்து பேசுகையில்- திரகோணமலை சன்முகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ள சம்பவம் கிழக்கு மாகாணத்தில் தமிழ்- முஸ்லிம் சகோதர உறவுக்கிடையே ஆபத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. இதற்காக தமிழ் அரசியல் தலைவர்கள் பதில் சொல்லவேண்டிய தேவையிருக்கிறது.

முஸ்லிம் பெண் ஆசிரியைகள் அவர்களது கலாசார ஆடையான ஹபாயாவை அணியக்கூடாது என்று கற்ற சமூகம் போர்க்கொடி தூக்கியிருப்பது ஆரோக்கியமானதொரு செயற்பாடு அல்ல. தேசியத்திலே தமிழ்- முஸ்லிம் சமூகங்கள் தங்களுக்கிடையே பேசித்தீர்க்கவேண்டிய அத்தனை விடயங்களும் முடிந்துவிட்டன. இப்போது ஆடையில் மாத்திரம்தான் பிரச்சியை இருக்கிறது என்பதுபோல நாங்கள் சண்டை பிடித்துக்கொண்டிருப்பது கவலையையும் வேதனையையும் தருகிறது.

தமிழ் மக்களுடைய மற்றும் தமிழ்ப்பேசும் மக்களுடைய பிரச்சினைகளின் தீர்வுக்காக நீண்டகாலவரலாற்றுடன் பல எதிர்ப்பார்ப்புக்களுடன் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இச்சூழலில், முஸ்லிம் பெண்கள் ஹபாயாவைக் கழற்ற வேண்டும் என்ற போராட்டத்தை ஒரு கற்ற சமூகம் முன்னெடுக்குமாக இருந்தால், ஏதோ தமிழ் மக்களது அத்தனை பிரச்சினைகளும் தீர்ந்துவிட்;டன. இறுதியாக ஹபாயா அணிவதில் மாத்திரம்தான் பிரச்சினை இருக்கிறது என்பது போல தேசியத்தில் தள்ளப்பட்டிருப்பது துரதிஷ்டவசமானது.

எனவே, தேசியத்திலும் மாகாணத்திலும் இருக்கின்ற தமிழ்த் தலைவர்கள் அவசரமாகச்செயற்பட்டு தமது பதிவுகளைச் செய்யவேண்டியிருக்கிறது. உடனடியாக அவர்களுடைய பிழைகளை அறிந்துகொண்டு செயற்படுகிற அந்தஸ்தை உறுதிப்படுத்தவேண்டிய பொறுப்பும் தமிழ் அரசியல் தலைவர்களிடத்திலே இருக்கிறது. இதனைச் செய்யத்தவறும் பட்சத்தில் ஏனைய மாவட்டங்களிலே இருக்கின்ற இனவாத சக்திகள் இன உறவைக்குழப்பிவிடுவதற்கு எடுக்கின்ற முயற்சிகளை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றார்.