அடுத்த கட்ட நகர்வுக்கு தயாராகும் வடக்கு முதல்வர்!!

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனிக் கட்சி ஒன்றை உருவாக்கினால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதனை வரவேற்கும் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.தனிக்கட்சி ஆரம்பிப்பது குறித்து வடக்கு முதல்வர் அண்மையில் சில தகவல்களை வெளியிட்டிருந்தார்.இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்;

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி தனியான கட்சி ஒன்றை உருவாக்க உள்ளதாக அறிகிறோம். இது உண்மையாக இருந்தால் அதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வரவேற்கிறது.மேலும், முதலமைச்சர் கூட்டமைப்பின் சார்பில் வந்த முதலமைச்சராகவும், கூட்டமைப்பின் உறுப்பினராகவும் இருந்தவர்.

ஆனால், கூட்டமைப்பின் தலைமையின் கொள்கைகளுடன் இணங்கி செயற்பட இயலாது என்பதை முதலமைச்சருடைய பல உரைகளில் இருந்து அவதானிக்க கூடியதாக இருந்தது.

அது தமிழ் மக்களுடைய அபிலாஷைகளை பாதிக்கும் என்ற நிலைப்பாடு வெளிப்பட்டிருக்கின்றது. அதனையே நாங்களும் கூறுகிறோம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கைகள் தமிழ் மக்களின் சாபக்கேடாக மாறியிருக்கின்றது.மேலும், புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தால் முதலமைச்சர் எப்படி செயற்பட போகிறார்? எப்படியானவர்கள் அவர்களுடைய கட்சியில் கூட்டு சேர போகிறார்கள்? என்பதும் முக்கியமான விடயமாகும்.அந்த வகையில் முதலமைச்சர் கொள்கையில் விட்டுக் கொடுப்பில்லாத தரப்புக்களுடன் கூட்டு சேரவேண்டும் என நாங்கள் எதிர்பார்கிறோம்.

ஆகவே, முதலமைச்சர் கொள்கையில் விடாப்பிடியான தரப்புக்களுடன் கூட்டு வைப்பாராக இருந்தால் அவருடன் இணைந்து செயற்படுவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தயாராகவே உள்ளது என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு முதலமைச்சர் தனியாக கட்சி தொடங்கினால், அவருக்கு ஆதரவு வழங்க ஈபி.ஆர்.எல்.எப் முன்வந்துள்ளாதாக அதன் தலைவர் தெரிவித்திருந்தார்.மேலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பதவி விலக வேண்டும் என்று தமிழ் தரப்புகளும், கூட்டு எதிரணியினர் கூறி வரும் நிலையில், வடக்கு முதல்வர் அடுத்த கட்ட அரசியல் காய் நர்வை நகர்த்தியுள்ளார் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக அமைந்திருக்கின்றது.